< Back
தேசிய செய்திகள்
சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் கூட்டுத்தொழுகையில் முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்பு
தேசிய செய்திகள்

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் கூட்டுத்தொழுகையில் முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்பு

தினத்தந்தி
|
29 Jun 2023 6:45 PM GMT

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதானத்தில் நடந்த பக்ரீத் கூட்டுத்தொழுகையில் முதல்-மந்திரி சித்தராமையா பங்கேற்றார்.

பெங்களூரு:

ஈத்கா மைதானம்

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகைகளின்போது கூட்டுத்தொழுகை நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த 2022-ம் ஆண்டு சில இந்து அமைப்புகள், ஈத்கா மைதானம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று அதை விளையாட்டு மைதானமாக பயன்படுத்தவும், இந்துமத நிகழ்ச்சிகள் நடத்தவும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தன. இதற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டது.

அந்த மைதானத்தில் கடந்த முறை தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதனால் அந்த ஈத்கா மைதானம் பிரச்சினைக்குரிய பகுதியாக மாறியது. அந்த மைதானம் மாநகராட்சிக்கு சொந்தமானது என்று அரசும், வக்பு வாரியத்திற்கு சொந்தமானது என்று வக்பு வாரியமும் கூறியது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கர்நாடகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது.

வெறுப்பை ஏற்படுத்தும்...

இந்த நிலையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானத்தில் நேற்று முஸ்லிம் மக்களின் கூட்டுத்தொழுகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா, வீட்டு வசதி, சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஜமீர்அகமதுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சித்தராமையா தனது தலையில் முஸ்லிம்கள் அணியும் தலைப்பாகை அணிந்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-

நம்மிடையே வெறுப்பை ஏற்படுத்தும் சக்திகள் உள்ளன. அந்த சக்திகள் திட்டமிட்டே இதை செய்கின்றன. அதற்கு நாம் முக்கியத்துவம் தரக்கூடாது. மனிதர்கள் அன்பு, நம்பிக்கையுடன் மனிதர்களாக வாழும் சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியுடன் மக்களின் வளர்ச்சியும் நடைபெற வேண்டும். இறைவன் அனைவருக்கும் நல்ல புத்தியை வழங்கி மனிதர்களாக வாழும் குணத்தை வழங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

தியாகத்தின் அடையாளம்

முஸ்லிம் மக்களுக்கு எனது இதயப்பூர்வமான பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பக்ரீத் பண்டிகை தியாகத்தின் அடையாளம். மனித சமூகத்திற்கு நல்லது நடைபெற வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

மேலும் செய்திகள்