ஜல்சக்தித்துறை மந்திரி ஷெகாவத்துடன் முதல்-மந்திரி சித்தராமையா சந்திப்பு
|மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை முதல்-மந்திரி சித்தராமையா நேரில் சந்தித்து பேசினார். அப்போது, தமிழகத்திற்கு வழங்க எங்களிடம் தண்ணீரே இல்லை என்று கூறினார்.
பெங்களூரு:
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக கர்நாடகம், தமிழகம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம், தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு கடந்த 18-ந் தேதி உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு, தங்களிடம் போதிய நீர் இல்லாததால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என்று கூறியது. பிறகு காவிரியில் சுமார் வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பு மத்திய ஜல்சக்தித்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை முதல்-மந்திரி சித்தராமையா டெல்லியில் நேற்று நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி, சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அப்போது, தற்போதைய சூழ்நிலையில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாத நிலை இருப்பதாக சித்தராமையா எடுத்துக் கூறினார். இந்த சந்திப்புக்கு பிறகு சித்தராமையா நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள கடினமான சூழ்நிலை குறித்து மத்திய மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்திடம் விவரமாக எடுத்துக் கூறியுள்ளேன். அவர் நேர்மறையான முறையில் கருத்துக்களை கூறினார். காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளோம். அந்த மனுவும் விசாரணைக்கு வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு பிறப்பிக்கும் உத்தரவுக்கு பிறகு அடுத்தக்கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். பிரதமரை சந்திக்கவும் நேரம் கேட்டுள்ளோம். அவர் நேரம் ஒதுக்கினால் அவரையும் சந்திப்போம். காவிரி விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட வேண்டும். சம்பந்தப்பட்ட 4 மாநிலங்களையும் அழைத்து பேசுமாறு பிரதமரிடம் கூறுவோம். கர்நாடகத்திற்கு குடிநீர், பாசனம், தொழில் நோக்கங்களுக்கு 106 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் தேவைப்படுகிறது.
காவிரி அணைகளுக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துவிட்டது. அதாவது நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடியில் இருந்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக சரிந்துவிட்டது. விவசாயிகள், கன்னட அமைப்புகள் தீவிரமாக போராட்டம் நடத்தி வருகின்றன. தமிழகத்திற்கு திறக்க எங்களிடம் தண்ணீரே இல்லை என்று கூறியுள்ளேன்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.