டெல்லியில் சந்திரபாபு நாயுடுவுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
|ஆந்திராவில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு வாழ்த்து தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி,
நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றியது. இதில் பா.ஜ.க. 240 தொகுதிகளை கைப்பற்றியது. கூட்டணி கட்சிகள் மொத்தம் 52 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பா.ஜ.க. கூட்டணி 292 இடங்களில் வென்றுள்ளது.
மத்தியில் ஆட்சியமைக்க 272 தொகுதிகளை கைப்பற்றவேண்டிய நிலையில் பா.ஜனதா கூட்டணி 292 இடங்களை கைப்பற்றியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 99 இடங்களை பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள் 17 இடங்களை பிடித்துள்ளன.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதற்காக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில், டெல்லி விமான நிலையத்தில் கலைஞரின் நீண்ட நாள் நண்பரான சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "டெல்லி விமான நிலையத்தில் கலைஞரின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன். அவருக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்ததோடு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் ஆந்திரா இடையேயான உறவுகளை வலுப்படுத்த ஒத்துழைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்தேன். அவர் மத்திய அரசில் முக்கியப் பங்காற்றுவார், தென் மாநிலங்களுக்காக வாதிடுவார், நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.