< Back
தேசிய செய்திகள்
சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்
தேசிய செய்திகள்

சீதாராம் யெச்சூரி இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

தினத்தந்தி
|
27 Sept 2024 6:39 PM IST

சீதாராம் யெச்சூரியின் இல்லத்திற்கு நேரில் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லி சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. 45 நிமிடங்கள் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதி, சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட நிதி, பள்ளிக்கல்வி சமக்ர சிக்ஷா திட்டத்துக்கு நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று கூறி அதற்கான கோரிக்கை மனுவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்தார்.

பிரதமர் மோடியை சந்தித்த பிறகு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் உள்ள மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தோழர் சீதாராம் யெச்சூரியின் குடும்பத்தினருடன் அன்பான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன். சீதாராம் யெச்சூரி எப்போதும், திராவிட முன்னேற்றக் கழகம் குறித்தும், எங்களது தனிச்சிறப்பான உறவு குறித்தும் எவ்வாறு உயர்வாகப் போற்றிப் பேசுவார் என்றும், ஸ்டாலின் என்ற எனது பெயரைச் சுட்டிக்காட்டி அவர்கள் நினைவுகூர்ந்தனர். தோழரே! உங்களது இன்மையை ஆழமாக உணர்கிறோம்!" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்