< Back
தேசிய செய்திகள்
வாக்குச்சீட்டுகளில் எக்ஸ் என எழுதினீர்களா? - தேர்தல் அதிகாரியிடம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கிடுக்கிப்பிடி கேள்வி
தேசிய செய்திகள்

வாக்குச்சீட்டுகளில் 'எக்ஸ்' என எழுதினீர்களா? - தேர்தல் அதிகாரியிடம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கிடுக்கிப்பிடி கேள்வி

தினத்தந்தி
|
20 Feb 2024 8:21 AM IST

வாக்குச்சீட்டுகளில் 'எக்ஸ்' என எழுதினீர்களா? என தேர்தல் அதிகாரியிடம் சுப்ரீம் கோட்டு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.

டெல்லி,

பஞ்சாப் - அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகார் உள்ளது. இதனிடையே, சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர்.

வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றது. மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மஷி எண்ணினார். காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார்.

ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மஷி அறிவித்தார். இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் மனோஜ் சோன்கர் சண்டிகார் மேயராக பதவியேற்றார்.

இதனிடையே, தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டு எண்ணிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 5ம் தேதி இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மஷியை கடுமையாக எச்சரித்தது. தேர்தல் நடத்திய அதிகாரி ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டதாக விமர்சித்தது. மேலும், சண்டிகார் மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரையும் காலவரையின்றி ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

இந்நிலையில், சண்டிகார் மேயர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சண்டிகார் மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடந்துள்ளது. அதனால், ஆவணங்களை நாங்களே ஆய்வு செய்யப்போகிறோம். சண்டிகார் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டுகளையும், வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான வீடியோவையும் நாங்கள் 20ம் தேதி (இன்று) ஆய்வு செய்வோம். தேர்தல் நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

முன்னதாக, வழக்கு விசாரணையின்போது சண்டிகார் மேயர் தேர்தல் அதிகாரி அனில் மஷியிடம் தலைமை நீதிபதி சந்திரசூட் கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பான விவரம்:-

தலைமை நீதிபதி சந்திரசூட்: நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப்போகிறேன் அனில் மஷி. அந்த கேள்விகளுக்கு உண்மையான பதில் கூறவில்லை என்றால் உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது மிகவும் முக்கியம். நாங்கள் வீடியோவை பார்த்துள்ளோம். வாக்குச்சீட்டில் எக்ஸ் என குறிப்பிட்டு கேமராவை பார்த்து என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? வாக்குச்சீட்டில் ஏன் எழுதினீர்கள்

தேர்தல் நடத்தும் அதிகாரி அனில்: வாக்குப்பதிவு நடந்தபின் வாக்குச்சீட்டில் நான் கையெழுத்திட வேண்டும். கிறுக்கப்பட்ட (சிதைக்கப்பட்ட) வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்படவேண்டும்.

தலைமை நீதிபதி: ஒருசில குறிப்பிட்ட வாக்குச்சீட்டுகளில் நீங்கள் 'எக்ஸ்' என குறிப்பிடுவது வீடியோவில் தெளிவாக உள்ளது. குறிப்பிட்ட வாக்குச்சீட்டுகளில் 'எக்ஸ்' என குறிப்பிட்டீர்களா? ஆம் அல்லது இல்லை என பதில் கூறுங்கள்.

தேர்தல் நடத்தும் அதிகாரி: ஆம்

தலைமை நீதிபதி: எத்தனை வாக்குச்சீட்டுகளில் 'எக்ஸ்' என குறிப்பிட்டீர்கள்?

தேர்தல் நடத்தும் அதிகாரி: 8

தலைமை நீதிபதி: நீங்கள் ஏன் வாக்குச்சீட்டில் கிறுக்கல் (சிதைக்கப்பட்ட - எக்ஸ் என குறிப்பிடுதல்) செய்தீர்கள்? நீங்கள் வாக்குச்சீட்டில் கையெழுத்து மட்டும்தானே இடவேண்டும். வாக்குச்சீட்டில் நீங்கள் குறியீடு இடலாம் என விதிமுறைகளில் எங்கு உள்ளது.

தேர்தல் நடத்தும் அதிகாரி: வாக்குச்சீட்டுகள் வேட்பாளர்களால் கிறுக்கல் (சிதைக்கப்படுதல்) செய்யப்பட்டிருந்தது. அவர்கள் வாக்குச்சீட்டுகளை பறித்துக்கொண்டு அதை அழித்தனர்.

தலைமை நீதிபதி: தேர்தல் நடத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவர் தேர்தல் நடைமுறையில் தலையிட்டுள்ளார்' என்றார்.

மேலும் செய்திகள்