< Back
தேசிய செய்திகள்
சத்தீஷ்கார்:  உளவாளி என கருதி பள்ளி மாணவன் படுகொலை; நக்சலைட்டுகள் வெறிச்செயல்
தேசிய செய்திகள்

சத்தீஷ்கார்: உளவாளி என கருதி பள்ளி மாணவன் படுகொலை; நக்சலைட்டுகள் வெறிச்செயல்

தினத்தந்தி
|
14 Aug 2024 11:48 PM IST

சத்தீஷ்காரில் சிறுவனின் மூத்த சகோதரன் சொய்யாம் சீதாராம் (வயது 19) சில நாட்களுக்கு முன் நக்சலைட்டுகளால் கொடூர கொலை செய்யப்பட்டான்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் புவார்தி கிராமத்தில், 16 வயது பள்ளி மாணவன் ஒருவன் அடித்து கொலை செய்யப்பட்டு உள்ளான். சிறுவனை உளவாளி என கருதி நக்சலைட்டுகள் படுகொலை செய்துள்ளனர் என போலீசார் இன்று தெரிவித்தனர்.

இதுபற்றி சுக்மா மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் கூறும்போது, முதல்கட்ட விசாரணையில், அந்த சிறுவன் தன்டேவாடா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்திருக்கிறான். உறவினர் மரணம் அடைந்த நிலையில், சொந்த ஊருக்கு வந்திருக்கிறான்.

இந்நிலையில், சொய்யாம் சங்கர் என்ற அந்த சிறுவன் கொல்லப்பட்டு உள்ளான். போலீசார் படை இன்று காலை சம்பவ பகுதிக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளது என்றார்.

ஒரு வாரத்திற்கு முன் உறவுக்கார பெண் பிரசவ காலத்தின்போது உயிரிழந்து இருக்கிறார். இதனால், அவரை பார்க்க அந்த சிறுவன் நேற்றிரவு புவார்தி கிராமத்திற்கு வந்துள்ளான்.

இந்த சூழலில், இந்த சிறுவன் போலீசுக்கு ரகசிய தகவல் அளிப்பவன் என கருதி நக்சலைட்டுகள் சிறுவனை கொலை செய்திருக்க வேண்டும் என தெரிகிறது என்று எஸ்.பி. கூறியுள்ளார்.

சிறுவனின் மூத்த சகோதரன் சொய்யாம் சீதாராம் (வயது 19) சில நாட்களுக்கு முன் நக்சலைட்டுகளால் கொடூர கொலை செய்யப்பட்டு பின்னர் உடல் தகனம் நடந்தது என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

நக்சலைட்டுகளுக்கு பயந்து சிறுவனின் குடும்பத்தினர் கிராமத்தில் இருந்து வேறு இடங்களுக்கு சென்று விட்டனர். எனினும், 2 சிறுவர்களும் கொடூர கொலை செய்யப்பட்டு உள்ளனர். தொடர்ந்து போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்