நக்சலைட்டுகள் ஆதிக்கத்தால் 15 ஆண்டுகளாக மூடப்பட்ட 260 பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்க முடிவு...!
|நக்சலைட்டுகள் ஆதிக்கத்தால் மூடப்பட்ட 260 பள்ளிக்கூடங்கள் 15 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராய்ப்பூர்,
சத்தீஸ்கர் மாநிலத்தில் பல ஆண்டுகளாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிலவி வருகிறது. நக்சலைட்டுகள் ஆதிக்கம் காரணமாக அம்மாநிலத்தின் சுக்மா, நாராணய்பூர், தண்டிவாடா, பிஜாபூர் ஆகிய
4 மாவட்டங்களில் கடந்த 15 ஆண்டுகளாக சுமார் 400 பள்ளிக்கூட்டங்கள் மூடப்பட்டுள்ளன.
இதனிடையே, தற்போது அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் பல்வேறு பகுதிகளில் நக்சலைட்டு, மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் குறைந்து வருகிறது. அதேவேளை, மூடப்பட்டுள்ள பள்ளிகளை மீண்டும் திறக்கும்படி உள்ளூர் மக்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது.
இந்நிலையில், 15 ஆண்டுகளாக செயல்பாடின்றி மூடப்பட்டுள்ள 400 பள்ளிகளில் முதற்கட்டமாக 260 பள்ளிக்கூடங்களை திறக்க சத்தீஸ்கர் அரசு முடிவு செய்துள்ளது. இவை, சுக்மா, நாராணய்பூர், தண்டிவாடா, பிஜாபூர் மாவட்டங்களில் உள்ளவையாகும். வரும் வியாழக்கிழமை முதல் 260 பள்ளிக்கூடங்களையும் திறக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பள்ளிக்கூடங்களை திறப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன. 15 ஆண்டுகளாக மூடப்பட்ட பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிகழ்வு அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.