சத்தீஸ்கர் சட்டசபைத்தேர்தல்: காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு
|சத்தீஸ்கர் சட்டசபைத் தேர்தலுக்கான காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தெரிவித்தார்.
ராய்ப்பூர்,
தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தலுக்கான தேதியை கடந்த 9-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதன்படி சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் நவம்பர் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மிசோரத்தில் நவம்பர் 7-ஆம் தேதியும் மத்தியப் பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25, தெலுங்கானாவில் நவம்பர் 30-ஆம் தேதியும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அனைத்து மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன.
இந்த சூழலில் சத்தீஸ்கரில் முதல்கட்ட தோ்தல் நடைபெறும் 20 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள் அக்டோபா் 20 ஆம் தேதி ஆகும். மனுக்கள் மீதான பரிசீலனை 21-ஆம் தேதி நடைபெறுகிறது. மனுக்களை திரும்பப் பெற அக்டோபா் 23ஆம் தேதி கடைசி நாளாகும்.
இந்நிலையில் சத்தீஸ்கரில் காங்கிரசின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அம்மாநில முதல்மந்திரி பூபேஷ் பாகல் தெரிவித்துள்ளார். மேலும் இரண்டாம் கட்டத்திற்கான மற்றொரு பட்டியல் பின்னர் வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சத்தீஸ்கரில் 64 வேட்பாளா்கள் அடங்கிய இரண்டாவது கட்ட வேட்பாளா் பட்டியலை பா.ஜனதா கடந்த திங்கள்கிழமை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.