வைரஸ் பாதிப்பால் 7 சிறுத்தை குட்டிகள், 13 மான்கள் அடுத்தடுத்து செத்தன
|பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் வைரஸ் பாதித்து 7 சிறுத்தை குட்டிகள், 13 மான்கள் அடுத்தடுத்து செத்தன. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு:
பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் வைரஸ் பாதித்து 7 சிறுத்தை குட்டிகள், 13 மான்கள் அடுத்தடுத்து செத்தன. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
7 சிறுத்தை குட்டிகள் செத்தன
பெங்களூரு புறநகர் ஆனேக்கல் அருகே பன்னரகட்டா உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் சிறுத்தை, யானை, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் காயமடைந்த வனவிலங்குகள், தாயை பிரிந்த வனவிலங்கு குட்டிகளை சிகிச்சை அளித்து பராமரிக்கும் மறுவாழ்வு மையமும் இங்கு செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் புலி, சிறுத்தை, சிங்கக் குட்டிகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் 80-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள் உள்ளன. இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி பூங்காவில் இருந்த சிறுத்தை குட்டிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அதற்கு கால்நடை மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த குட்டி செத்தது.அதனை தொடர்ந்து அடுத்தடுத்து சிறுத்தை குட்டிகள் செத்து மடிந்தன. கடந்த 5-ந் தேதிக்குள் 7 சிறுத்தை குட்டிகள் செத்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைரஸ் பாதிப்பு
இதையடுத்து செத்துப்போன சிறுத்தை குட்டிகளின் ரத்த மாதிரிகளை எடுத்து கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். இதில், ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் குறைந்து இருந்ததும், இதனால் சிறுத்தை குட்டிகள் பெலின் பன்லிகோபெனியா எனும் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு செத்ததும் தெரிந்தது.
இதையடுத்து சிகிச்சை மையம் மற்றும் பன்னரகட்டா பூங்காவில் உள்ள மற்ற சிறுத்தை குட்டிகளுக்கும், வனவிலங்குகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக வனவிலங்குகள் சிகிச்சை மையம் மற்றும் உயிரியல் பூங்காவில் அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது.
மேலும் 5 குட்டிகள் பாதிப்பு
சிறுத்தை குட்டிகளுக்கு ஏற்பட்ட வைரஸ் பாதிப்பு குறித்து பன்னரகட்டா வனவிலங்குகள் சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மைய செயல் இயக்குனர் சூர்யாசென் கூறியதாவது:-
வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு சிறுத்தை குட்டிகள் செத்தது பரிசோதனையில் தெரிந்துள்ளது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட சிறுத்தை குட்டிகள் வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டு உயிரிழந்துள்ளன.
பொதுவாக இந்த வகை வைரஸ் பாதிப்பு பூனை இனங்களுக்கு வருவது வழக்கம். அந்த வைரஸ் பாதிப்பு சிறுத்தைகளுக்கும் ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த வைரஸ் பாதிக்கப்பட்ட 4 சிறுத்தை குட்டிகளும், ஒரு சிங்க குட்டியும் சிகிச்சையில் உள்ளன. அவற்றுக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கண்காணிப்பு தீவிரம்
இதற்கு மத்தியில் நிபா வைரஸ் பரவல் கேரளாவில் அதிகரித்து காணப்படுவதால், பன்னரகட்டா உயிரியல் பூங்கா மற்றும் வனவிலங்கு சிகிச்சை மையத்தில் கண்காணிப்பை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
வரும் நாட்களில் பன்னரகட்டா உயிரியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு உடல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
13 மான்களும் உயிரிழந்தன
இதற்கிடையே பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 28 மான்களையும் வைரஸ் பாதித்தது. இதையடுத்து அவற்றையும் மருத்துவ குழுவினர் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் கடந்த 5-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை 13 மான்கள் அடுத்தடுத்து உயிரிழந்தன. மற்ற மான்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பன்னரகட்டா உயிரியல் பூங்காவில் 7 சிறுத்தை குட்டிகளும், 13 மான்களும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பீதியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.