< Back
தேசிய செய்திகள்
பெண்ணை தாக்கி கொன்று பாதி உடலை தின்ற சிறுத்தை
தேசிய செய்திகள்

பெண்ணை தாக்கி கொன்று பாதி உடலை தின்ற சிறுத்தை

தினத்தந்தி
|
10 Aug 2023 12:15 AM IST

சிவமொக்கா அருகே சிறுத்தை, பெண்ணை தாக்கி கொன்று பாதி உடலை தின்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி கிராமமக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சிவமொக்கா:

சிவமொக்கா அருகே சிறுத்தை, பெண்ணை தாக்கி கொன்று பாதி உடலை தின்ற கொடூர சம்பவம் நடந்துள்ளது. அந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கக்கோரி கிராமமக்கள் வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

சிறுத்தை நடமாட்டம்

கர்நாடக மாநிலம் சிவமொக்கா (மாவட்டம்) தாலுகா பிக்கோனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து சிறுத்தை ஒன்று வெளியேறி கிராமத்திற்குள் புகுந்து ஆடு, மாடு, உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடி வருகிறது.

எனவே ஊருக்குள் புகுந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வரும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி வனத்துறையினரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் பிக்கோனஹள்ளி கிராமத்தில் சிறுத்தை நுழைந்து தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

சிறுத்தை தாக்கியது

இந்தநிலையில், பிக்கோனஹள்ளி கிராமத்தை சோ்ந்தவர் யசோதம்மா (வயது 40). இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட தகராறில் அவர் கணவரை விட்டு பிரிந்து வந்து தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவருக்கு அப்பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அதில் மக்காச்சோளம் சாகுபடி செய்திருந்தார். அந்த விளை நிலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. யசோதம்மா நேற்றுமுன்தினம் மாலை 5 மணி அளவில் தனது தோட்டத்தில் விவசாய வேலையில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த சிறுத்தை ஒன்று யசோதம்மாவின் விளை நிலத்திற்குள் புகுந்தது. இதை கவனிக்காத யசோதம்மா விவசாய பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருந்தார். அந்த சமயத்தில் பதுங்கி வந்த சிறுத்தை திடீரென யசோதம்மா மீது பாய்ந்து தாக்கியது. இதில் அவர் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வேலை பார்த்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் சிறுத்தை யசோதம்மாவை இழுத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் ஓடியது.

பாதி உடலை தின்றது

இதையடுத்து அவர்கள் யசோதம்மாவை தேடி சென்றனர். அப்போது யசோதம்மா உடல் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். அவரது பாதி உடலை சிறுத்தை தின்று விட்டு சாலையோரம் பாதி உடலை போட்டு விட்டு சென்றது. இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள், சிவமொக்கா புறநகர் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் யாசோதம்மாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முற்றுகை போராட்டம்

முன்னதாக கிராம மக்கள் திரண்டு வந்து வனத்துறையினரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், எங்கள் கிராமத்தில் பல மாதங்களாக சிறுத்தை அட்டகாசம் செய்து வருகிறது. அந்த சிறுத்தையை பிடிக்க கோரியும், இதுவரை சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது சிறுத்தை தாக்கியதில் யசோதம்மா உயிரிழந்துவிட்டார். எனவே சிறுத்தையை உடனே கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வனத்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவோம் என்று எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து வனத்துறையினர், சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து கிராமமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பும், பீதியும் நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்