9 வயது சிறுவனை தாக்கிய சிறுத்தையால் பீதி
|எலந்தூர் அருகே கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை சாலையில் நடந்து சென்ற 9 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளேகால்:
எலந்தூர் அருகே கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை சாலையில் நடந்து சென்ற 9 வயது சிறுவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுத்தை அட்டகாசம்
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகாவில் கடந்த ஜூன் மாதம் 26-ம் தேதி ககளிகுந்தி கிராமத்தில் சிறுத்தை ஒன்று புகுந்து சுசீலா என்ற சிறுமியை இழுத்து சென்று தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த சிறுமி பரிதாபமாக இறந்தார். அந்த சம்பவம் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. இந்த முறை மல்லிகேஹள்ளி கிராமத்தில் நடந்துள்ளது.
எலந்தூர் தாலுகாவில் இந்த மல்லிகேஹள்ளி கிராமம் உள்ளது. வனப்பகுதியையொட்டி இருப்பதால் அடிக்கடி சிறுத்தை, புலிகள் கிராமத்திற்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடிவிட்டு செல்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்புகூட இதே கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை நாய் மற்றும் கால்நடையை அடித்து கொன்றுவிட்டு சென்றன.
மழையால் தொய்வு
இதனால் பீதியடைந்த கிராம மக்கள் அந்த சிறுத்தையை பிடிக்கும்படி கிராம மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்தனர். அதைகேட்ட வனத்துறை அதிகாரிகள் மல்லிகேஹள்ளி பகுதியில் ஒரு கூண்டு வைத்தனர். அந்த கூண்டில் சிறுத்தை பிடிபடும் என்று எதிர்நோக்கி காத்திருந்தனர். ஆனால் பிடிப்படவில்லை.
அதாவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு கால்நடையை வேட்டையாடிய சிறுத்தை அதே கிராமத்திற்குள் வந்தது. இதை அறிந்த வனத்துறையினர் அந்த சிறுத்தையை பிடிக்க முயன்றனர். ஆனால் மழை அதிகமாக இருந்ததால் சிறுத்தையை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து அந்த சிறுத்தை தேடி வந்தனர்.
சிறுவன் மீது தாக்குதல்
இந்தநிலையில் நேற்று காலை மல்லிகேஹள்ளி கிராமத்திற்குள் நுழைந்த சிறுத்தை சாலையில் நடந்து சென்ற ஹர்ஷித் (வயது 9) என்ற சிறுவன் மீது தாக்குதல் நடத்தியது. இதனால் காயமடைந்த சிறுவன் கதறி கூச்சலிட்டான். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பாத்தனர். அப்போது சிறுத்தை சிறுவனை தாக்கி கொண்டிருந்தது. இதை பார்த்த அவர்கள் கூச்சலிட்டு, சிறுத்தை அங்கிருந்து துரத்தினர். இதையடுத்து சிறுவனை மீட்ட அவர்கள் சாம்ராஜ்நகர் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் கிராம மக்களிடம் விசாரணை நடத்தினர்.
கூண்டு வைத்து பிடிக்க முயற்சி
அப்போது வனத்துறை அதிகாரிகளை சுற்றி வளைத்த கிராம மக்கள் சிறுத்தை பிடிக்காமல் விட்டால் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் கூடுதல் கூண்டு வைத்து சிறுத்தை பிடிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் மேலும் 5 இடங்களில் கூண்டுகளை கூண்டு வைத்தனர். இதை பார்த்த கிராம மக்கள் பின்னர் கலைந்து சென்றனர்.