< Back
தேசிய செய்திகள்
சிறுத்தை தாக்கி 3 பேர் காயம்
தேசிய செய்திகள்

சிறுத்தை தாக்கி 3 பேர் காயம்

தினத்தந்தி
|
5 Nov 2022 12:15 AM IST

கே.ஆர்.நகர் டவுனில் சிறுத்தை தாக்கி 3 பேர் காயம் அடைந்தனர். அந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

மைசூரு:

கே.ஆர்.நகர் டவுனில் சிறுத்தை தாக்கி 3 பேர் காயம் அடைந்தனர். அந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.

குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தை

மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் டவுனில் கனகதாசர் நகர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் குடியிருப்பு பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு சிறுத்தை ஒன்று புகுந்து நடமாடியதாக தெரிகிறது. சிறுத்தை நடமாட்டத்தை சிலர் பார்த்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன்பேரில் கே.ஆர்.நகர் வனத்துறையினர் மற்றும் டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் கால்தடத்தை வைத்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்துள்ளனர். இதையடுத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் இரவு நேரம் என்பதால் சிறுத்தை வனத்துறையினருக்கு தென்படவில்லை.

இதனால் வனத்துறை அதிகாரிகள், போலீசார், டவுன் பஞ்சாயத்து அதிகாரிகள் வாகனத்தில் கே.ஆர்.நகர் டவுனில் கனகதாசர் நகர், வித்யாநகர், சாரிகே நகர், வால்மீகி நகர் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று ஒலிப்பெருக்கி மூலமாக சிறுத்தை நடமாட்டம் பற்றி எச்சரிக்கை விடுத்து, வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தினர். இதனால் சிறுத்தை பீதிக்கு ஆளான அப்பகுதி மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கினர். இந்த நிலையில் நேற்று காலை

வனத்துறை அதிகாரிகள் வந்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இதற்கிடையே சிறுத்தை மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்துள்ளது.

3 பேர் காயம்

அப்போது சிறுத்தை, மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து அந்த நபர் தவறி கீழே விழுந்து காயம் அடைந்தார்.

பின்னர் சிறுத்தை அங்கிருந்து ஒரு வீட்டின் சுவர் மீது ஏற முயன்றது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து அங்கிருந்தவர்கள் அலறினர்.

இதனால் சிறுத்தை பயந்து ஓடி வேறு இடங்களுக்கு சென்று 2 பேரை தாக்கி காயப்படுத்தியுள்ளது. பின்னர் இறுதியாக சிறுத்தை கனகதாசர்நகர் முள்ளூர் சாலை பகுதியில் உள்ள புதரில் பதுங்கி இருந்ததாக தெரிகிறது.

மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்

இதையறிந்த வனத்துறை அதிகாரிகள், போலீசார் அங்கு விரைந்து சென்று புதரில் பதுங்கி இருந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர். இதையடுத்து சிறிதுநேரத்தில் சிறுத்தை மயக்க நிலைக்கு சென்றதும் பிடித்து கூண்டில் ஏற்றி லாரியில் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிட்டனர். இதற்கிடையே சிறுத்தை தாக்கி காயமடைந்த 3 பேரும், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறுத்தை பிடிபட்டதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். ஆனாலும் கே.ஆர்.டவுன் பகுதியை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதி இல்லை, எப்படி சிறுத்தை வந்தது என்று பொதுமக்கள் பேசிகொள்கிறார்கள்.

மேலும் சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர். குடியிருப்பு பகுதிகளுக்குள் சிறுத்தை புகுந்து 3 பேரை தாக்கிய சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறுத்தை நடமாடிய வீடியோ, படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்