டெல்லியில் டீசல் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு
|டெல்லியில் விழும் லேசான பனிப்பொழிவால் தூசுமாசு அதனோடு சேர்ந்து எங்கும் கலைந்து போக வழி இல்லாமல் அந்தரத்தில் தேங்குகிறது.
புதுடெல்லி,
டெல்லியில் குளிர்காலத்தில் காற்று மாசு அதிகரிப்பது வழக்கம். அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடை முடிந்து வயல்கழிவுகளை எரிப்பதால் அந்த புகைமாசு டெல்லியை சூழ்கிறது. இத்துடன் டெல்லி ரோடு மற்றும் வீதிகளை சுத்தம் செய்வதால் கிளம்பும் தூசு, வாகனங்களில் இருந்து வெளியாகும் புகைமாசு போன்றவையும் சேர்ந்து கொள்கிறது. இந்த நேரத்தில் டெல்லியில் விழும் லேசான பனிப்பொழிவால் தூசுமாசு அதனோடு சேர்ந்து எங்கும் கலைந்து போக வழி இல்லாமல் அந்தரத்தில் தேங்குகிறது. இது பனிப்பொழிவைப்போல தூர பார்வைத்திறனை குறைக்கிறது. சுமார் 50 அடி தூரத்துக்கு அப்பால் உள்ளவற்றைக்கூட பார்க்க முடியாது.
இந்த தூசு மாசுவால் பொதுமக்கள் பலவித இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். புகை மாசுவை பார்ப்பதால் கண் எரிச்சல், சுவாசிப்பதால் இருமல், சளி உள்ளிட்ட பிரச்சினைகள் மற்றும் சுவாசக்கோளாறுகள் ஏற்படுகின்றன. பலர் மூச்சு விடவே சிரமப்படுகிறார்கள்.
இவற்றில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற டெல்லி அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. கட்டுமான பணிகள் மற்றும் பழைய கட்டிட இடிப்பு பணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது. ஆங்காங்கே தண்ணீர் தெளிப்பான்கள் மூலம் தூசு கட்டுப்படுத்தப்படுகிறது. டீசல் பஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் இந்த நடவடிக்கைகளால் முழு பலன் கிட்டவில்லை.
பாதிப்புகளில் இருந்து முதியவர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகளை காப்பாற்ற அதிக கவனம் செலுத்தப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளுக்கு டெல்லி அரசு 2 நாள் விடுமுறை அளித்துள்ளது. இதை நீட்டிப்பது பற்றி வரும் திங்கட்கிழமை முடிவு எடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், காற்று மாசைக் கட்டுப்படுத்த, கிரேடட் ரெஸ்பான்ஸ் படையின் திட்டம் 4 அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, சாலையில் துாசியை சுத்தம் செய்ய புகை எதிர்ப்பு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரியும் போது, வாகனத்தை ஆப் செய்தல் நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.
மேலும், புதுடில்லி, குருகிராம், பரிதாபாத், காசியாபாத், கவுதம் புத்தா நகர் ஆகிய இடங்களில், பி.எஸ்., 3 ரக பெட்ரோல் மற்றும் பி.எஸ்., 4 ரக டீசல் வாகனங்கள் இயக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது