சத்தீஷ்கார்: வங்கி ஊழியரை நடுத்தெருவில் தாக்கிய எம்.எல்.ஏ.; வைரலான வீடியோ
|சத்தீஷ்காரில் விவசாயிகளின் பணம் கையாடல் செய்யப்பட்டு விட்டது என கூறி வங்கி ஊழியரை எம்.எல்.ஏ. தாக்கிய வீடியோ வைரலானது.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பிரிஹஸ்பத் சிங். இந்நிலையில், சத்தீஷ்காரில் பல்ராம்பூர் மாவட்டத்தில் ராமானுஜகஞ்ச் பகுதியில் உள்ள கேந்திரிய வங்கி ஒன்றில் பணியாற்றி வந்த ஊழியர்களுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இதனை பார்த்த அந்த வழியே சென்ற பொதுமக்களும் எம்.எல்.ஏ.வை சுற்றி திரண்டு விட்டனர். இந்நிலையில், அந்த கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவரின் கன்னத்தில் அவர் அறையும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.
இதனை தொடர்ந்து சுர்குஜா மண்டலத்திற்கு உட்பட்ட கூட்டுறவு வங்கிகளை சேர்ந்த ஊழியர்கள் அனைவரும் முதல்-மந்திரி பூபேஷ் பாகலுக்கு, கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், எம்.எல்.ஏ.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.
இதுபற்றி செய்தியாளர்களிடம் எம்.எல்.ஏ. சிங் பேசும்போது, விவசாயிகளின் கணக்கில் இருந்து மோசடி செய்து வங்கி ஊழியர்கள் பணம் எடுத்து உள்ளனர். அவற்றை கொண்டு கோடிக்கணக்கான மதிப்பில் தங்களுக்கென்று வீடு கட்டியுள்ளனர்.
போலி கையெழுத்து போட்டு விவசாயிகளின் பணம் முழுவதும் கையாடல் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகளின் வங்கி கணக்கு புத்தகங்களையும் மறைத்து வைத்து விட்டனர்.
இதுபற்றி அறிந்து, வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் பேச முயன்றேன். அவர்கள் என்னிடமும் தவறான அணுகுமுறையை கையாண்டனர் என கூறியுள்ளார்.
அதனாலேயே, நான் ஆத்திரம் அடைந்து, அடித்தேன். விவசாயிகளுக்கு அநீதி இழைக்கும்போது நாங்கள் சகித்து கொண்டிருக்க முடியாது. விவசாயிகளுக்கு இதுபோன்று நடக்கும்போது, விதிகளையும் மற்றும் ஒழுங்குமுறைகளையும் தகர்த்தெறிய நாங்கள் தயங்கமாட்டோம் என ஆவேசமுடன் கூறினார்.
வீடியோ வைரலானது பற்றி பேசிய அவர், காயமடைந்த விவசாயி, வங்கிக்கு சென்று தனது பணம் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவ செலவுக்கு தேவை என்றும் கூறியுள்ளார். ஆனால், அவரை அடித்து, வங்கியை விட்டு ஊழியர்கள் வெளியே வீசி விட்டனர். அந்த வீடியோவையும் வைரலாக்குங்கள் என அவர் கூறியுள்ளார்.