போலீசில் பிடிபட்டதால் போதைப்பொருள் பொட்டலத்தை விழுங்கிய பெண்
|கடந்த 6 மாதங்களில் சிம்லா மாவட்டத்தில் 337 போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் போதைப்பொருள் வியாபாரிகள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். நேற்று முன்தினம் சஞ்சாலியில் இருந்து வந்த ஒரு வாகனத்தை கல்லறை சுரங்கப்பாதை அருகே மடக்கிப்பிடித்தனர். காரில் 5 பேர் இருந்தனர். போலீசாரைப் பார்த்ததும் காரில் இருந்தவர்களில் ஒரு இளம்பெண் தன்னிடம் இருந்த போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கி உள்ளார்.
விசாரணையின்போது இந்த தகவல் தெரியவந்ததையடுத்து, அந்த இளம்பெண்னை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு எண்டோஸ்கோபி மூலம் வயிற்றில் இருந்த போதைப்பொருள் பாக்கெட்டை வெளியே எடுத்தனர். அந்த பாக்கெட்டில் 7.60 கிராம் எடையுள்ள போதைப்பொருள் இருந்தது. போதைப்பொருள் விற்பனை தொடர்பாக 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 6 மாதங்களில் சிம்லா மாவட்டத்தில் 337 போதைப்பொருள் தடுப்பு வழக்குகளில் 15 பெண்கள் உட்பட 502 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.