தசரா விழா முடிவடைந்த நிலையில் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
|தசரா விழா முடிவடைந்த நிலையில் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. தேரை மன்னர் யதுவீர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.
மைசூரு:
தசரா விழா
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்கி கடந்த 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடந்து முடிந்தது. தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் கடந்த 5-ந்தேதி நடந்தது. இதில் அலங்கரிக்கப்பட்ட 750 கிலோ தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருந்து யானையில் ஊர்வலமாக சென்றார்.
இந்த நிலையில் தசரா விழா முடிந்ததும் பவுர்ணமி நாளில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் வகையில் தேரோட்டம் நடப்பது வழக்கம். அதேபோல், பவுர்ணமியையொட்டி நேற்று சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது.
தேரோட்டம்
நேற்று நடத்த தேரோட்டத்தில், அலங்கரிக்கப்பட்ட தேரில் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளினார். அந்த தேரை காலை 7.50 மணிக்கு சப லக்கனத்தில் மன்னர் யதுவீர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இந்த தேரோட்டத்தையொட்டி மைசூரு சாமுண்டி மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
அவர்கள் தேரில் எழுந்தருளிய சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். திரளான பக்தர்கள் வெள்ளத்தில் சாமுண்டீஸ்வரி அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்தார். தேர் மீது பக்தர்கள் மரிகொழுந்தை வீசி கரகோஷங்களை எழுப்பினர். இதில் கலெக்டர் பகாதி கவுதம், எம்.எல்.ஏ.க்கள் ஜி.டி.தேவேகவுடா, ராமதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தையொட்டி சாமுண்டி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.