மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம்
|மைசூரு சாமுண்டி மலையில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மைசூரு:
உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்புசவாரி ஊர்வலம் எனப்படும் தசரா ஊர்வலம் கடந்த 24-ந்தேதி நடந்தது. இதில் கர்நாடகத்தின் காவல் தெய்வமான சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை அபிமன்யு யானை சுமந்து கொண்டு அரண்மனையில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்னிமண்டபம் வரை சென்றது. தசரா ஊர்வலம் பன்னிமண்டபம் அடைந்ததும் தசரா விழா நிறைவடைந்தது. இந்த தசரா ஊர்வலத்தை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா முடிவடைந்து 3-வது நாள் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு திருஷ்டி கழிக்கும் வகையில் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டும் தசரா விழா முடிந்து 3-வது நாளான 26-ந்தேதி தேரோட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று ைமசூரு சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. காலை 7.50 மணி முதல் காலை 8.10 மணிக்குள் சுப விருச்சிக லக்கனத்தில் தேரோட்டம் நடந்தது. சாமுண்டீஸ்வரி அம்மன், வண்ண, வண்ண துணிகள் மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினாள்.
மன்னர் யதுவீர், அவரது மனைவி திரிஷிகா குமாரி, மகாராணி பிரமோதா தேவி ஆகியோர் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு முதல் பூஜையை செலுத்தி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். சாமுண்டி மலையில் கோவிலை சுற்றி இந்த தேரோட்டம் நடந்தது.
தேரின் முன்பும், பின்பும் கலை குழுவினரின் நடனம் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க கோலாகலமாக தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். மேலும் அவர்கள் தேரில் இருந்து அருள்பாலித்த சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர்.
இந்த தேரோட்டத்தையொட்டி சாமுண்டி மலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பக்தர்கள் சோதனைக்கு பின்னரே மலைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
நாளை (சனிக்கிழமை) சாமுண்டி மலையில் உள்ள தேவிெகரே குளத்தில் தெப்ப உற்சவம் நடக்க உள்ளது.