< Back
தேசிய செய்திகள்
இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
தேசிய செய்திகள்

இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை: அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

தினத்தந்தி
|
5 Feb 2023 1:26 PM IST

அந்தமான் முன்னாள் தலைமை செயலாளர் 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

போர்ட் பிளேயர்,

அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைமை செயலாளராக இருந்தவர் ஜிதேந்திர நரைன். இவர் தலைமை செயலாளராக இருந்தபோது அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

தலைமை செயலாளர் பங்களாவில் வைத்து ஜிதேந்திர நரைன் தனது கூட்டாளிகளான தொழிலதிபர் சந்தீப் சிங் என்ற ரிங்கு, முள்ளாள் தொழிலாளர் துறை இயக்குனர் ரிஷிஷ்வர்லால் ரிஷி ஆகியோருடன் சேர்ந்து 21 வயது இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 1-ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் போலீசில் புகார் அளித்தார். அந்த சமயத்தில் ஜிதேந்திர நரைன், டெல்லி நிதித்துறையின் தலைவராக பணியாற்றி வந்தார். ஜிதேந்திர நரைன் மீது பாலியல் புகார் எழுந்த நிலையில் அக்டோபர் 17-ம் தேதி அவரை பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.

இதை தொடர்ந்து இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை தொடர்பாக ஜிதேந்திர நரைன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது

இந்நிலையில், இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் தொடர்பாக ஜிதேந்திர நரைன் உள்பட சிறையில் உள்ள 3 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள ஜிதேந்திர நரைன் உள்பட 3 பேர் மீது கோர்ட்டில் விரைவில் வழக்கு விசாரணை நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்