அரசு பணிக்கு ஆள் தேர்வில் ஊழலுக்கு முற்றுப்புள்ளி - பிரதமர் மோடி பெருமிதம்
|அரசு பணி ஆள் தேர்வு முறையில் செய்யப்பட்ட மாற்றத்தால் ஊழலுக்கு முடிவு கட்டப்பட்டதாக பிரதமர் மோடி கூறினார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி, மத்திய அரசு பணிகளுக்கு 10 லட்சம் பேரை தேர்வு செய்து நியமிப்பதற்காக 'ரோஜ்கார் மேளா' (வேலைவாய்ப்பு திருவிழா) நடத்தி வருகிறார். 5-வது ரோஜ்கார் மேளா நேற்று நடைபெற்றது. மத்திய அரசு பணிகளுக்கு புதிதாக 71 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்குவதற்காக இந்நிகழ்ச்சி நடந்தது. தேர்வு செய்யப்பட்டவர்கள், நாடு முழுவதும் 45 இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.
ஊழல்
டெல்லியில் இருந்தபடி, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் அவர்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-
கடந்த 9 ஆண்டுகளில், மத்திய பா.ஜனதா அரசால் வேலைவாய்ப்பும், உள்கட்டமைப்பு வளர்ச்சியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.
அரசு பணிக்கு ஆள் தேர்வில் மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. விண்ணப்பிப்பது முதல் தேர்வு முடிவுகள் வெளியாவது வரை ஆன்லைனுக்கு மாற்றப்பட்டது. அதனால், ஆள் தேர்வில் ஊழலுக்கும், உறவினர்களுக்கு சலுகை காட்டுவதற்கும் முடிவு கட்டப்பட்டுள்ளது.
வேகமான பணி
வால்மார்ட் போன்ற சர்வதேச நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சமீபத்தில் சந்தித்தேன். நாட்டின் தொழில்வளம், முதலீடு ஆகியவற்றில் முன்எப்போதும் இல்லாத சாதகமான நிலை காணப்படுகிறது. 75 ஆண்டுகால சுதந்திர வரலாற்றில் இந்தியா எப்போதும் இல்லாத வேகத்தில் பணியாற்றி வருகிறது.
வருங்கால வைப்புநிதி அமைப்பின் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை வைத்து பார்க்கும்போது, கடந்த 2018-2019 நிதிஆண்டில் இருந்து 4 கோடியே 50 லட்சம் பேர் அமைப்புசார்ந்த துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
அன்னிய நேரடி முதலீடும், சாதனை அளவிலான ஏற்றுமதியும் நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது.
கிராமப்புற சாலைகள்
ஸ்டார்ட்அப் துறையில் புரட்சி நடந்து வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு சில நூறு எண்ணிக்கையில் இருந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எண்ணிக்கை, தற்போது 1 லட்சத்தை எட்டி உள்ளது. அவை குறைந்தபட்சம் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை அளித்துள்ளன.
அதுபோல், வளர்ச்சி சாதனையை பொறுத்தவரை, ஓராண்டுக்கு முன்பு 4 லட்சம் கி.மீ. தூரத்துக்கு மட்டுமே கிராமப்புற சாலைகள் இருந்தன. தற்போது, 7 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு சாலைகள் உள்ளன.
மருத்துவ கல்லூரிகள் அதிகரிப்பு
விமான நிலையங்கள் எண்ணிக்கை 74-ல் இருந்து 150 ஆக உயர்ந்துள்ளது. ஏழைகளுக்கு வீடு கட்டித்தரும் திட்டத்தின்கீழ், 4 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றால் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. 2014-ம் ஆண்டில் 720 ஆக இருந்த பல்கலைக்கழகங்கள் எண்ணிக்கை 1,100 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவ கல்லூரிகள் எண்ணிக்கை 400-ல் இருந்து 700 ஆக உயர்ந்துள்ளது.
மக்களின் அடிப்படை தேவைகளுக்காக மூலதன செலவுகளுக்கு மத்திய அரசு ரூ.34 லட்சம் கோடி செலவிட்டுள்ளது. 'முத்ரா' திட்டத்தில் ரூ.23 லட்சம் கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது என்று அவர் பேசினார்.