'இந்தியா'வின் பெயர் 'பாரத்' என மாற்றம்? - நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்படுகிறதா?
|இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வைத்துள்ளது.
புதுடெல்லி,
உலக அளவில் இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் தருணத்துக்காக தலைநகர் டெல்லி தயாராகி வருகிறது. ஜி-20 அமைப்பின் தற்போதைய தலைவராக இந்தியா செயல்பட்டு வருவதால் இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு டெல்லியில் வருகிற 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடைபெறுகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 'பாரத் மண்டபம்' என்ற சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் இந்த மாநாடு நடக்கிறது.
சர்வதேச பொருளாதாரம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் சார்ந்த முக்கிய முடிவுகளை எடுத்து வரும் ஜி-20 அமைப்பின் டெல்லி மாநாட்டில் பசுமை எரிசக்தி பரிமாற்றம், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச பிரச்சினைகளை எதிர்கொள்வதற்கான முயற்சிகள் குறித்து உறுப்பு நாடுகளின் தலைவர்கள் விவாதிக்க உள்ளனர்.
இந்த நிலையில், ஜி20 உச்சி மாநாட்டிற்கு வரும் தலைவர்களுக்கு இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்தளிக்க உள்ளார். இதற்கான அழைப்பிதழில் அவரை குறிப்பிடும் இடத்தில், "இந்தியாவின் ஜனாதிபதி" என்பதற்கு பதிலாக "பாரத்தின் ஜனாதிபதி" என அச்சிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகை தரும் விருந்தில் பங்கேற்க அனுப்பிய அழைப்பிதழில் உள்ள வார்த்தைகளால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது.
இந்திய ஜனாதிபதி என குறிப்பிடுவதற்கு பதில் பாரத் ஜனாதிபதி என இருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இது மாநிலங்களில் ஒன்றியம் என்பது தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டின் பெயர் இந்தியா என்பதற்கு பதில் 'பாரத்' என மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் 'பாரத்' என்ற பெயர் மாற்றம் செய்யும் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிறப்புக் கூட்டத்தொடர் வரும் 18-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறித்து எதிர்க்கட்சிகள் விவாதித்து வந்த நிலையில், தற்போது இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருப்பது நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை மிகுந்த எதிர்ப்பார்ப்பில் வைத்துள்ளது.