< Back
தேசிய செய்திகள்
சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்:  இஸ்ரோ தலைவர் தகவல்
தேசிய செய்திகள்

சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் தகவல்

தினத்தந்தி
|
23 March 2023 1:00 AM GMT

இந்த ஆண்டு மத்திய பகுதியில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

ஆமதாபாத்,

சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டு மத்திய பகுதியில் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இந்திய கோள் அறிவியல் மாநாடு நடந்தது. இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் இஸ்ரோவின் அடுத்தடுத்த திட்டங்கள் குறித்து விளக்கினார். குறிப்பாக நிலவை ஆய்வு செய்வதற்காக செயல்படுத்தப்பட உள்ள 3-வது திட்டமான சந்திரயான்-3 குறித்து விளக்கினார்.

இது தொடர்பாக அவர் பேசும்போது கூறியதாவது:-

சந்திரயான்-3 விண்கலம் முழுமையாக தயாராக உள்ளது. இது முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. சில திருத்த வேலைகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல உருவகப்படுத்துதல்கள் மற்றும் சோதனைகள் போன்றவற்றின் மூலம் இந்த திட்டத்தின் மீது நாங்கள் நிறைய நம்பிக்கையை வளர்த்து வருகிறோம்.

இந்த சந்திரயான்-3 விண்கலம் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் ஏவுதல் நடைபெறலாம்.

இந்த விண்கலமும் சந்திரயான்-2 போன்றே ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய அமைப்பைக் கொண்டிருக்கும். நிலவின் சுற்றுப்பாதைக்கு லேண்டரை எடுத்துச் சென்று தரையிறக்குவதுதான் முதன்மையான நோக்கம்.

சந்திரயான்-3-ன் முதன்மை நோக்கம் துல்லியமான தரையிறக்கம் ஆகும். அதற்காக, புதிய கருவிகளை உருவாக்குதல், தோல்வி முறைகளைக் கவனிப்பது போன்ற பல பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்த முறை சந்திரயான்-3 தரையிறங்கி அதன் சரியான வேலையைச் செய்யும் என்று நம்புவோம். ரோவர் வெளியே வந்து குறைந்தபட்சம் பவுர்ணமி நாளிலாவது நிலவின் மேற்பரப்பில் ஆய்வு செய்யும். இது மிகவும் சுவாரசியமாக இருக்கும்.

இதைப்போல சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் சோலார் மிஷன் ஆதித்யா-எல்1 விண்கலம் மிகவும் தனித்துவமான சூரிய கண்காணிப்பு திறனாக இருக்கும். அதற்கான கருவிகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன. அவற்றை செயற்கைக்கோளில் ஒருங்கிணைக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட்டுள்ளது.

ஆதித்யா-எல்1 ஏவுதலுக்காக நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்த ஆண்டின் நடுப்பகுதிக்குள், இந்த பணியை ஒரு பெரிய வெற்றியடையச் செய்வோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆதித்யா-எல்1 நீண்ட காலத்திற்கு இடையூறு இல்லாமல் சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும். சூரியனை மட்டுமின்றி, துகள்களின் உமிழ்வையும் கவனித்து சூரியனில் இருந்து பூமிக்கு பயணிக்கும்போது அவற்றை அளவிடுவதிலும், சூரியன் நமது விண்வெளி வானிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதன் அடிப்படையிலும் ஆய்வு செய்யும் தனித்துவமான கருவிகளையும் இந்த விண்கலம் கொண்டிருக்கும்.

இவ்வாறு இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்

மேலும் செய்திகள்