பூமி, நிலவை படம்பிடித்த சந்திரயான்-3 விண்கலம்...!
|வரும் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
புதுடெல்லி,
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 'சந்திரயான்-3' என்ற விண்கலத்தை, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து கடந்த மாதம் 14-ந்தேதி விண்ணில் ஏவியது.
வெற்றிகரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்து கொண்டு, சந்திரயான்-3 விண்கலம் நிலவு சுற்றுப்பாதையில் நுழைந்தது. தற்போது நிலவின் சுற்று வட்டப்பாதையில் பயணித்து வருகிறது. தற்போது 174 கி.மீ., அதிகபட்சம் 1,437 கி.மீ. தொலைவு கொண்ட நிலவு வட்ட சுற்றுப்பாதையில் விண்கலம் வலம் வருகிறது.
இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் பூமி மற்றும் நிலவை படம்பிடித்த புதிய புகைப்படங்களை, இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது. நிலவில் தரை இறங்கக்கூடிய லேண்டரின் அடிப்பகுதியில் உள்ள கிடைமட்ட கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. புகைப்படத்தில் நிலவில் காணப்படும் பைதாகரஸ் பள்ளம், எரிமலைகளால் ஏற்பட்ட சமவெளிகள் வரை துல்லியமாக படம் பிடிக்கப்பட்டுள்ளது. லேண்டரின் முன்பகுதியிலுள்ள மற்றொரு கேமரா மூலம் பூமியின் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
வரும் 23-ம் தேதி நிலவின் மேற்பரப்பில் லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.