< Back
தேசிய செய்திகள்
சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்ற காவல்: ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு
தேசிய செய்திகள்

சந்திரபாபு நாயுடுவுக்கு நீதிமன்ற காவல்: ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு

தினத்தந்தி
|
10 Sept 2023 8:28 PM IST

சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்-மந்திரியாக இருந்தார். இவரது பதவி காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தின் நிதியில் ரூ.550 கோடி வரை ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாநில குற்ற புலனாய்வு துறை (சி.ஐ.டி) கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கிடையே ஆளும் கட்சிக்கு எதிராக மக்களை அணிதிரட்டும் வகையில் பஸ்சில் ஊர் ஊராக யாத்திரை சென்று பொதுக்கூட்டங்களை நடத்தி வந்த சந்திரபாபு நாயுடு, நேற்று முன்தினம் இரவு நந்தியாலா மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அதன் பின்னர் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அருகே பஸ்சை நிறுத்தி, அதிலேயே உறங்கினார்.

அப்போது அங்கு வந்த நந்தியாலா போலீசார் நேற்று அதிகாலை 6 மணியளவில் சந்திரபாபு நாயுடுவை அதிரடியாக கைது செய்தனர். பின்னர், சந்திரபாபு நாயுடுவுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து விஜயவாடாவில் உள்ள சி.ஐ.டி. அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்திரபாபு நாயுடுவிடம் ஊழல் வழக்கு தொடர்பாக பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.

பின்னர் இன்று காலை விஜயவாடாவில் உள்ள ஊழல் தடுப்பு கோர்ட்டில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி தரும்படி மாநில குற்ற புலனாய்வு துறை தரப்பில் முறையிடப்பட்டது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து ராஜமுந்திரி சிறையில் சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட உள்ளார்.

இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திர மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர்.

பேரணி, போராட்டம், கூட்டம் சேர்த்தல் உள்ளிட்டவற்றிற்கு மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வன்முறை சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்க பாதுகாப்பு கருதி துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்