< Back
தேசிய செய்திகள்
சண்டிகார் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
தேசிய செய்திகள்

சண்டிகார் மேயர் தேர்தல்: ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

தினத்தந்தி
|
20 Feb 2024 4:20 PM IST

வாக்குச்சீட்டு எண்ணிக்கையின்போது தேர்தல் அதிகாரி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

புதுடெல்லி,

பஞ்சாப் - அரியானா மாநிலங்களின் தலைநகராக சண்டிகார் உள்ளது. இதனிடையே, சண்டிகார் மாநகராட்சி மேயர் தேர்தல் கடந்த மாதம் 30-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளராக மனோஜ் சோன்கர், இந்தியா கூட்டணி வேட்பாளராக ஆம் ஆத்மியின் குல்தீப் சிங் போட்டியிட்டனர்.

வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றது. மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. தேர்தலில் பதிவான வாக்குகளை தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மஷி எண்ணினார். காங்கிரஸ் - ஆம் ஆத்மி கூட்டணி வேட்பாளர் குல்தீப் சிங் 20 வாக்குகள் பெற்றார். பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் 16 வாக்குகள் பெற்றார

ஆனால், ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் சிங் பெற்ற 20 வாக்குகளில் 8 வாக்குகள் செல்லாது என தேர்தல் நடத்தும் அதிகாரி அனில் மஷி அறிவித்தார். இதன் மூலம் 16 வாக்குகள் பெற்ற பா.ஜ.க. வேட்பாளர் மனோஜ் சோன்கர் மேயர் தேர்தலில் வெற்றிபெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் மனோஜ் சோன்கர் சண்டிகார் மேயராக பதவியேற்றார்.

இதனிடையே, தேர்தல் நடத்தும் அதிகாரி வாக்குச்சீட்டு எண்ணிக்கையின்போது முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இதையடுத்து, ஆம் ஆத்மி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த 5-ந்தேதி இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு தேர்தல் நடத்திய அதிகாரி அனில் மஷியை கடுமையாக எச்சரித்தது. தேர்தல் நடத்திய அதிகாரி ஜனநாயக படுகொலையில் ஈடுபட்டதாக விமர்சித்தது. மேலும், சண்டிகார் மாநகராட்சியின் முதல் கூட்டத்தொடரையும் காலவரையின்றி ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

சண்டிகார் மேயர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு நேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, "சண்டிகார் மேயர் தேர்தலில் குதிரை பேரம் நடந்துள்ளது. அதனால், ஆவணங்களை நாங்களே ஆய்வு செய்யப்போகிறோம். சண்டிகார் மேயர் தேர்தல் வாக்குச்சீட்டுகளையும், வாக்கு எண்ணிக்கையின்போது பதிவான வீடியோவையும் நாங்கள் 20-ந்தேதி(இன்று) ஆய்வு செய்வோம். தேர்தல் நடத்திய அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

இந்த நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சண்டிகர் மேயர் தேர்தலில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிட்டது. செல்லாத வாக்குகள் என்று தேர்தல் அதிகாரியால் அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளையும் சேர்த்து மீண்டும் எண்ணி தேர்தல் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.

இதன்படி சண்டிகார் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். இது குறித்து நீதிபதி சந்திரசூட் பிறப்பித்த உத்தரவில், தேர்தல் அதிகாரியால் செல்லாத வாக்குகள் என்று அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை சேர்த்தால் ஆம் ஆத்மி வேட்பாளருக்கு 20 வாக்குகள் கிடைக்கும் என்றும், தேர்தல் அதிகாரியின் அறிவிப்பை ரத்து செய்வதாகவும், சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்