மாணவர்கள் ஒன்றிணைந்து பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கி சாதனை
|மனிதர்களை கொண்டு காற்றில் அசையும் தேசிய கொடியின் உருவம் அந்த மைதானத்தில் உருவாக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, சண்டிகர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், சண்டிகர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 5,885 மாணவர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து நின்று மனிதவடிவ பிரம்மாண்ட தேசிய கொடியை உருவாக்கினர். இல்லந்தோறும் தேசிய கொடி ஏற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஹர் கர் திரங்கா' இயக்கத்தையொட்டி நடைபெற்ற இதில் பங்கேற்ற மாணவர்கள், காவி, வெள்ளை, பச்சை மற்றும் கருநீலம் என தனித் தனியே ஆடைகளை அணிந்து வந்திருந்தனர்.
மனிதர்களை கொண்டு காற்றில் அசையும் தேசிய கொடியின் உருவம் அந்த மைதானத்தில் உருவாக்கப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு நிறுவனம் செய்த முந்தைய சாதனையை இந்த புதிய சாதனை முறியடித்தது.
பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மத்திய வெளியுறவு மற்றும் கலாச்சாரத் துறை இணை மந்திரி மீனாட்சி லேகி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். என்ஐடி அறக்கட்டளை மற்றும் சண்டிகர் பல்கலைக்கழகம் ஒன்றிணைத்து, தேசபக்தியின் உணர்வைக் கொண்டாடி, நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய விதம் முற்றிலும் பாராட்டுக்குரியது என ஆளுநர் புரோஹித் தெரிவித்துள்ளார்.