சிக்கமகளூருவில் இன்று முதல்5 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு
|சிக்கமகளூருவில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சிக்கமகளூரு;
தென்மேற்கு பருவமழை
கர்நாடகத்தில் கடந்த ஜூன் 1-ந் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. ஆனால் அந்த மாதத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இந்த நிலையில் ஜூலை மாதம் தொடங்கியது முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. கர்நாடக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களிலும், மலைநாடு மாவட்டங்களாக சிக்கமகளூரு, சிவமொக்கா, ஹாசன், குடகு, தாவணகெரே உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
இதனால் மாநிலத்தில் ஓடும் காவிரி, கபிலா, ஹேமாவதி, பத்ரா, துங்கா உள்பட ஏராளமான ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன்காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின. ஒரு சில அணைகள் தனது முழுகொள்ளளவை எட்டின.
5 நாட்களுக்கு கனமழை
இந்த நிலையில் தலைநகர் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் மழை சற்று ஓய்ந்துள்ளது. இந்த நிலையில் சிக்கமகளூரு உள்பட மாநிலம் முழுவதும் இன்று(சனிக்கிழமை) முதல் 5 நாட்கள் சூறைக்காற்று மற்றும் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதில் சிக்கமகளூரு மாவட்டத்தில் மட்டும் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தகவலை வானிலை ஆய்வு மைய அதிகாரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.