< Back
தேசிய செய்திகள்
கர்நாடகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

கோப்பு படம்

தேசிய செய்திகள்

கர்நாடகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல்

தினத்தந்தி
|
4 Jun 2022 3:58 AM IST

கடலோர மாவட்டங்களுக்கு ‘மஞ்சள் அலர்ட்’ விடுத்துள்ள வானிலை ஆய்வு மையம் கர்நாடகத்தில் 4 நாட்கள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

பெங்களூரு:

மஞ்சள் அலர்ட்

கர்நாடகத்தின் தலைநகர் பெங்களூரு உள்பட பல்வேறு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்தது. இதனால் பெங்களூரு, பெங்களூரு புறநகர், கடலோர கர்நாடக மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. கோடை மழை பெய்ததை அடுத்து, தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. மேலும், சூறைகாற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சாலையோர மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன.

இதனால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பெங்களூரு புறநகர் பகுதிகளில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன.

இந்த நிலையில் கர்நாடகத்தில் 4 தினங்களுக்கு (5-ந் தேதி வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெங்களூரு, பெங்களூரு புறநகர், கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது. பெங்களூருவில் இன்றும் (சனிக்கிழமை) நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியது. கர்நாடக கடலோர மாவட்டங்களுக்கு "மஞ்சள் அலர்ட்" விடுத்துள்ளது.

முன்னெச்சரிக்கை

மேலும் மைசூரு, மண்டியா, சாம்ராஜ்நகர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஹாசன், சிவமொக்கா, ராமநகர், குடகு மற்றும் சிக்கமகளூரு மாவட்டங்களில் மழை பாதிப்புகள் கடுமையாக இருக்கும் எனவும் அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் தயாராக வேண்டும் என கூறி உள்ளது.

அதேசமயம் வடகர்நாடக மாவட்டங்களான பாகல்கோட்டை, பீதர், கதக், கொப்பல், ராய்ச்சூர் மாவட்டங்களில் மழை பாதிப்புகள் இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலையில் திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் இரவு நேரத்தில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் உருவானது.

மேலும் செய்திகள்