< Back
தேசிய செய்திகள்
ஜார்க்கண்ட் புதிய அரசு விரைவில் பதவியேற்பு... கவர்னரின் அழைப்புக்காக காத்திருக்கும் சம்பாய் சோரன்
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட் புதிய அரசு விரைவில் பதவியேற்பு... கவர்னரின் அழைப்புக்காக காத்திருக்கும் சம்பாய் சோரன்

தினத்தந்தி
|
1 Feb 2024 10:54 AM IST

சம்பாய் சோரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள், கவர்னரை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுத்தனர்.

ராஞ்சி:

சுரங்க முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். கைது நடவடிக்கைக்கு முன்னதாக முதல்-மந்திரி பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். மாநில கவர்னர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

அதன்பின்னர் ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்த சம்பாய் சோரன் (வயது 67), ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக, அதாவது முதல்-மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் சம்பாய் சோரன், கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களும், கவர்னரை சந்தித்து ஆதரவு கடிதம் கொடுத்து, பதவியேற்பு விழாவிற்கு நேரம் ஒதுக்கும்படி கோரிக்கை வைத்தனர். கவர்னர் அழைப்பு விடுத்ததும் புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெறும். கவர்னரின் அழைப்புக்காக சம்பாய் சோரன் காத்திருக்கிறார்.

82 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் சட்டசபையில், பெரும்பான்மைக்கு 42 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. கவர்னரிடம் வழங்கப்பட்ட ஆதரவு கடிதத்தில், 43 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். ஒரு எம்.எல்.ஏ.வுக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர் வரவில்லை.

மேலும் செய்திகள்