ஈத்கா மைதானத்தில் கன்னட ராஜ்யோத்சவாவை கொண்டாட அனுமதி வழங்க வேண்டும்; அரசுக்கு, சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் கெடு
|ஈத்கா மைதானத்தில் கன்னட ராஜ்யோத்சவாவை கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என்று அரசுக்கு, சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில் முஸ்லிம்கள் தொழுகை நடத்தி வருகின்றனர். ஆனால் ஈத்கா மைதானத்தில், இந்து பண்டிகைகளை கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என்று கன்னட அமைப்பினர், இந்து அமைப்பினர், சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களும் நடந்தன. இந்த நிலையில் கன்னட ராஜ்யோத்சவாவை ஈத்கா மைதானத்தில் கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என்று சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அமைப்பினர், பெங்களூரு கலெக்டர் சீனிவாசிடம் அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது.
ஆனாலும் தடையை மீறி மைதானத்தில் கன்னட கொடியை ஏற்றி ராஜ்யோத்சவாவை கொண்டாடுவோம் என்று சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் அறிவித்து இருந்தனர். ஆனால் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். இதனால் மைதானத்தில் ராஜ்யோத்சவா விழாவை கொண்டாடும் முடிவு கைவிடப்பட்டது. ஆனாலும் இந்த மாத இறுதிக்குள் ஈத்கா மைதானத்தில் ராஜ்யோத்சவா விழாவை கொண்டாட அனுமதி வழங்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் சாம்ராஜ்பேட்டை நகரவாசிகள் எச்சரித்து உள்ளனர்.