பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் சங்கிலி தொடர் விபத்து; 3 பேர் சாவு
|பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் நடந்த சங்கிலி தொடர் விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு-மைசூரு இடையே 10 வழி சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 வழி விரைவுச்சாலையாகவும், 4 வழி சர்வீஸ் சாலையாகவும் உள்ளது. இந்த விரைவுச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இந்த நியைில் நேற்று ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணா அருகே பெங்களூரு-மைசூரு விரைவுச்சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. கனமழை காரணமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார், சாலை தடுப்பு சுவரை உடைத்து கொண்டு மற்றொரு சாலைக்கு சென்று எதிரே வந்த 2 கார்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இந்த சங்கிலி தொடர் விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். விபத்தில் பலியானவர்கள் மற்றும் படுகாயம் அடைந்தவர்களின் பெயர் விவரம் உடனடியாக போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதுகுறித்து சென்னப்பட்டணா போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.