கர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு முடிவு வெளியானது; என்ஜினீயரிங் பிரிவில் பெங்களூரு மாணவர் முதலிடம்
|கர்நாடகத்தில் சி.இ.டி. தேர்வு முடிவு வெளியானது. முதல் முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். என்ஜினீயரிங் பிரிவில் பெங்களூரு மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
பெங்களூரு:
சி.இ.டி. தேர்வு முடிவு
கர்நாடகத்தில் என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு (சி.இ.டி.) கடந்த மாதம் (ஜூன்) 16 மற்றும் 17-ந் தேதிகளில் நடந்தது. இந்த தேர்வை எழுத 2 லட்சத்து 16 ஆயிரத்து 559 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 829 பேர் இந்த தேர்வை எழுதினர்.
இந்த நிலையில் சி.இ.டி. தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கர்நாடக தேர்வாணைய அலுவலகத்தில் இன்று காலை உயர் கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண், தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.
இந்த ஆண்டு முதல்முறையாக மாணவிகளை விட மாணவர்கள் அதிகளவும், முதன்மையாகவும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து மந்திரி அஸ்வத் நாராயண் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெங்களூரு மாணவர் முதலிடம்
என்ஜினீயரிங் படிப்பில் பெங்களூரு எலகங்காவில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியில் அபூர்வ் தண்டன் 98.611 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பிடித்துள்ளார். விவசாய பிரிவில் (பி.எஸ்சி. அக்ரி) பெங்களூரு எச்.ஏ.எல். பகுதியில் உள்ள பள்ளியில் படித்த அர்ஜுன் ரவிசங்கர் 96.292 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். ஓமியோபதி பிரிவில் பெங்களூரு நேஷனல் சென்டர் கல்லூரி மாணவரான கிருஷிகேர் நாகபூஷன் கங்கே 99.167 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தில் தேர்ச்சி அடைந்திருக்கிறார்.
பி.பார்ம் பிரிவில் பெங்களூரு பள்ளியில் படித்த சிசிர்.ஆர்.கே 98.889 மதிப்பெண்கள் எடுத்து முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார். குறிப்பாக என்ஜினீயரிங் பிரிவில் முதல் 10 இடங்களில் தேர்ச்சி பெற்றவர்களில் 9 பேர், பெங்களூருவை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சிறப்பாகும்.
சி.பி.எஸ்.சி.யில் படித்தவர்களே...
தொழில் படிப்புகளுக்கு நடந்த இந்த பொது நுழைவு தேர்வில் அனைத்து பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் சி.பி.எஸ்.சி.யில் படித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். என்ஜினீயரிங் படிப்பில் ஒட்டு மொத்தமாக 1 லட்சத்து 71 ஆயிரத்து 656 பேரும், பி.எஸ்சி. (விவசாயம்) பிரிவில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 968 பேரும், கால்நடை அறிவியல் பிரிவில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 820 பேரும், பி.பார்ம் பிரிவில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 568 பேரும், டி.பார்ம் பிரிவில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 568 பேரும் நுழைவு தேர்வில் தேர்ச்சி அடைந்திருக்கிறாா்கள்.
இவ்வாறு மந்திரி அஸ்வத் நாராயண் கூறினார். பேட்டியின் போது உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் ரஷ்மி வி.மகேஷ் உடன் இருந்தார்.