வெள்ளி விழா கொண்டாட்டம்... சாப்ட்வேர் நிறுவனத்தின் சி.இ.ஓ பலி - அதிர்ச்சி வீடியோ
|கூண்டை தாங்கி கொண்டிருந்த இரும்பு சங்கிலி ஒருபுறம் உடைந்ததில் இருவரும் கீழே விழுந்தனர்.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரபல சாப்ட்வேர் நிறுவனமான விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் வெள்ளி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் விஸ்டெக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சஞ்சய் ஷா (வயது 56) கலந்துகொண்டார்.
இந்த விழா கொண்டாட்டத்தின்போது மேடையில் இருந்த ஒரு இரும்புக் கூண்டுக்குள் சஞ்சய் ஷா மற்றும் அவரது சக ஊழியர் விஸ்வநாத் ராஜ் தட்லா இருவரும் ஏறினர். அந்த கூண்டு 20 அடி உயரத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டது. அப்போது அந்த கூண்டை தாங்கி கொண்டிருந்த இரும்புச் சங்கிலி ஒருபுறம் உடைந்ததில் இருவரும் கீழே விழுந்தனர்.
கீழே விழுந்த இருவரையும் அங்கு இருந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சஞ்சய் ஷா உயிரிழந்தார். மேலும் மற்றொருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். சஞ்சய் ஷா கீழே விழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக நிறுவனத்தின் மற்றொரு அதிகாரி போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் பிலிம் சிட்டி நிகழ்ச்சி நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.