வன்முறை எதிரொலி: காஷ்மீர் போலீஸ் அதிகாரி மணிப்பூருக்கு அதிரடி மாற்றம்
|பயங்கரவாத சம்பவங்களை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்ற காஷ்மீர் போலீஸ் அதிகாரி மணிப்பூருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
மணிப்பூரில் கிட்டத்தட்ட 5 மாதங்களாக இனக்கலவரம் நடந்து வருகிறது. அங்கு வன்முறை சம்பவங்கள் சற்று ஓய்ந்து இருந்த நிலையில் மாணவர்கள் 2 பேர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் மணிப்பூரின் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக காஷ்மீரை சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரியை மணிப்பூருக்கு இடம் மாற்றம் செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பயங்கரவாத சம்பவங்களை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவரான ஸ்ரீநகர் போலீஸ் சூப்பிரண்டு ராகேஷ் பல்வாலை மணிப்பூருக்கு இடம் மாற்றம் செய்யும் உள்துறை அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு மந்திரி சபையின் நியமன குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போது காஷ்மீரின் ஜம்முவில் உள்ள உதம்பூரில் வசித்து வரும் பல்வால், ஏற்கனவே மணிப்பூர் காவல்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார், கடந்த 2017-ம் ஆண்டு சுராசந்த்பூரில் போலீஸ் சூப்பிரண்டாக இருந்தார். தோபால் மற்றும் இம்பால் மாவட்டங்களிலும் பணியாற்றியுள்ளார்.
ஸ்ரீநகரில் சிறுபான்மையினர் மற்றும் போலீசார் மீதான தாக்குதல்கள் உள்பட பல்வேறு பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வந்த சமயத்தில் அந்த நகரின் போலீஸ் சூப்பிரண்டாக ராகேஷ் பல்வால் பொறுப்பேற்றார். அவர் அங்கு சட்டம்-ஒழுங்கை மேம்படுத்துவதில் தீவிர கவனம் செலுத்தினார். இதன் மூலம் ஸ்ரீநகரில் சிறுபான்மையினர் மற்றும் போலீசார் மீதான தாக்குதல்கள் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.