'ஏர் இந்தியா' கட்டிடம் ரூ.1,601 கோடிக்கு மராட்டிய அரசுக்கு விற்பனை - மத்திய அரசு ஒப்புதல்
|மத்திய அரசு மும்பை ஏர் இந்தியா கட்டிடத்தை மராட்டிய அரசுக்கு ரூ.1,601 கோடிக்கு வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது
மும்பை,
மும்பை நரிமன்பாயிண்ட் பகுதியில் பிரபலமான ஏர் இந்தியா கட்டிடம் உள்ளது. மெரின் டிரைவ் கடற்கரையில் 23 மாடிகளுடன் அமைந்து உள்ள ஏர் இந்தியா பிரமாண்ட கட்டிடம் மராட்டிய அரசின் தலைமை செயலகம் அமைந்து உள்ள மந்திராலயாவுக்கு மிகவும் அருகில் உள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்ட போது, நரிமன்பாயிண்ட் கட்டிடம் விற்பனை செய்யப்படவில்லை. எனவே அந்த கட்டிடத்தை 1,601 கோடிக்கு வாங்க கடந்த ஆண்டு நவம்பரில் மராட்டிய மாநில மந்திரி சபை ஒப்புதல் வழங்கியது.
இந்தநிலையில் ரூ.1,601 கோடிக்கு ஏர் இந்தியா கட்டிடத்தை மராட்டிய அரசுக்கு விற்பனை செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இது குறித்து முதலீடு மற்றும் பொதுச்சொத்து மேலாண்மை துறை செயலாளர் துகின் காந்தா பாண்டே அவரது எக்ஸ் பக்கத்தில், ''மத்திய அரசு மும்பை ஏர் இந்தியா கட்டிடத்தை மராட்டிய அரசுக்கு ரூ.1,601 கோடிக்கு வழங்க ஒப்புதல் அளித்து உள்ளது. இதுதவிர ஏர் இந்தியா நிறுவனம் மராட்டிய அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.298.42 கோடி பாக்கியை தள்ளுபடி செய்ய மராட்டிய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது'' என கூறியுள்ளார்.
மெரின் டிரைவ் பகுதியில் உள்ள ஏர் இந்தியா கட்டிடம் 1974-ம் ஆண்டு பிரபல கட்டிட கலை நிபுணர் ஜான் புர்கியால் கட்டப்பட்டதாகும். 50 ஆண்டுகளுக்கு முன்பே ஏர் இந்தியா கட்டிடம் மையப்படுத்தப்பட்ட ஏ.சி. வசதி, நகரும் படிக்கட்டு உள்ளிட்ட பல வசதிகளுடன் கட்டப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.