< Back
தேசிய செய்திகள்
தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமாட்டோம் - பீகார் துணை முதல்-மந்திரி
தேசிய செய்திகள்

தமிழ்நாட்டில் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதலா? 'ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமாட்டோம்' - பீகார் துணை முதல்-மந்திரி

தினத்தந்தி
|
5 March 2023 9:09 PM IST

‘ஒருபோதும் பொறுத்துக்கொள்ளமாட்டோம்... மத்திய அரசு தலையிட வேண்டும்’ என்று பீகார் துணை முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

பாட்னா,

தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளிலும் வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டில் தமிழர்களின் வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் கேள்விக்குறியாகி வருகிறது.

இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, வரும் 8-ம் தேதி வட இந்தியாவில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை கொண்டாட தமிழ்நாட்டில் வேலை செய்து வரும் வட இந்திய தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு வருகின்றனர்.

ஆனால், தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூகவலைதளங்களில் போலி செய்தி பரவியதால் இந்த விவகாரம் பூதாகரமானது. குறிப்பாக வட இந்திய ஊடகங்களில் இது தொடர்பாக போலி செய்திகள் பரவின. ஒருசில இந்தி நாளிதழ்களில் தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும் பொலி செய்தி வெளியாகின. அதேபோல், உத்தரபிரதேச பாஜக தலைவரும் இது தொடர்பாக போலியான தகவலை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், பீகார் பாஜக கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் இது தொடர்பான போலி வீடியோ டுவிட்டரில் பதிவிடப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள வடமாநில தொழிலாளர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் பீகார் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பரவும் செய்தி தொடர்பாக பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தேஜஸ்வி கூறுகையில், இந்த விவகாரத்தில் பீகார் அரசு மிகவும் தீவிரமாக உள்ளது. இது தொடர்பாக குழு ஒன்று தமிழ்நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை பீகார் மற்றும் தமிழ்நாடு அரசுகள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது.

பீகார் பாஜக தலைவர் தமிழ்நாடு பாஜக தலைவருக்கு தொடர்புகொண்டு கேட்டபோது அதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெறவில்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் கூறியதாக செய்தித்தாளில் செய்திகள் வந்துள்ளன.

உண்மையை கண்டறிய எங்கள் அரசு குழு ஒன்றை அனுப்பியுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்காக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் உதவி தொலைபேசி எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஏதேனும் கவலைகொண்டுள்ளதா என்று பார்த்தீர்களா? இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட்டு 2 மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

மேலும் செய்திகள்