< Back
தேசிய செய்திகள்
கால்பந்து கூட்டமைப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வேண்டுகோள்
தேசிய செய்திகள்

கால்பந்து கூட்டமைப்பு விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வேண்டுகோள்

தினத்தந்தி
|
16 Aug 2022 12:53 PM IST

இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு இன்று தற்காலிகமாக ரத்து செய்தது.

புதுடெல்லி,

17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடைபெறுவதாக இருந்தது. வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30-ம் தேதி வரை இப்போட்டிகள் மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், பெண்கள் உலகக்கோப்பை போட்டியை இந்தியா நடத்தும் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ததுடன், இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தையும் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா இன்று தற்காலிகமாக ரத்து செய்தது. பிபா-வின் இந்த நடவடிக்கை இந்திய கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில் இந்த கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது.

சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட கமிட்டி இந்த தேர்தல் மற்றும் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கவனித்து வருகிறது.

இதனிடையே, 3-ம் நபரின் தலையீடு உள்ளதாக கூறி இந்திய கால்பந்து கூட்டமைப்பின் உரிமத்தையும், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பையை இந்தியாவில் நடத்துவதற்கான உரிமத்தையும் சர்வதேச கால்பந்து கவுன்சில் தற்காலிகமாக ரத்து செய்தது.

இந்நிலையில், இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கை விரைந்து விசாரிக்குமாறு மத்திய அரசு தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை வைக்கப்பட்டது.

மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா, இந்த விவகாரத்தை வழக்கை விசாரிக்கும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் போபன்னா பார்வைக்கு இன்று கொண்டுவந்தார்.

இதை ஏற்ற நீதிபதிகள், இந்திய கால்பந்து கூட்டமைப்பு தொடர்பான வழக்கு ஏற்கனவே நாளைய (ஆக.17) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளதாகவும், நாளை இந்த வழக்கு விசாரிக்கபடும் எனவும் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கில் நாளை அதிரடி தீர்ப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக முழு விவரத்தை படிக்க... உலகக்கோப்பை கால்பந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு; உரிமத்தையே ரத்து செய்த பிபா - அதிர்ச்சி பின்னணி

மேலும் செய்திகள்