ராகுல் காந்திக்கு மத்திய அரசு பயப்படுகிறது; சஞ்சய் ராவத் கருத்து
|எம்.பி. பதவி தகுதி நீக்கம் ரத்து விவகாரத்தில், ராகுல் காந்திக்கு மத்திய அரசு பயப்படுகிறது என சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனையை சுப்ரிம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது. ராகுல்காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து எம்.பி. பதவியை உடனடியாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனாவின் எம்.பி. சஞ்சய் ராவத் கூறியதாவது:- ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேகம், சுப்ரிம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு அதை ரத்து செய்வதில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வந்த 3 நாட்கள் ஆகிவிட்டது, ஆனாலும் சபாநாயகர் ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை ரத்து செய்யவில்லை. மத்திய அரசு ராகுல் காந்திக்கு பயப்படுகிறது. எனவே அவரின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து எம்.பி. பதவியை வழங்காமல் உள்ளது. எங்களின் யூகம் குறித்து நாளை எதிர்க்கட்சிகள் சந்தித்து பேச உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.