பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை - பா.ஜனதா அறிவிப்பு
|பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பா.ஜனதா கூறியுள்ளது.
பொது சிவில் சட்டம்
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அயோத்தி ராமர் கோவில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்தியில் ஆளும் பா.ஜனதா அரசு திட்டமிட்டு உள்ளது. பா.ஜனதாவின் அடிப்படை நோக்கங்களில் பொது சிவில் சட்டமும் ஒன்று என்பதால், வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் இதை அமல்படுத்த மத்திய அரசு மும்முரம் காட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளின் கருத்துகளை மத்திய சட்ட கமிஷன் கேட்டு வருகிறது. அதன்படி பல்வேறு அமைப்புகளும், தனிநபர்களும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
காங்கிரஸ் எதிர்ப்பு
இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் அவசியம் என பிரதமர் மோடியும் சமீபத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். 2 வகையான சட்டங்களால் நாட்டை வழிநடத்த முடியாது என அவர் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து பொது சிவில் சட்டம் நாடு முழுவதும் பேசுபொருளாகி வருகிறது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதைப்போல சிறுபான்மை பிரிவினர், பழங்குடியினர் உள்ளிட்ட சில பிரிவினர்களும் பொது சிவில் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
ரவிசங்கர் பிரசாத்
இந்த நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவிசங்கர் பிரசாத்திடம், பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படுமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளிக்கையில், 'பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதன் முடிவுக்காக நீங்கள் காத்திருக்க வேண்டும்' என தெரிவித்தார்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பா.ஜனதாவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த வாக்குறுதிகளில் ஒன்று என்றும் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.
இதன் மூலம் பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாதம் 20-ந்தேதி தொடங்கும் மழைக்கால கூட்டத்தொடரிலேயே இது தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.