சீனா, அமெரிக்காவில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மத்திய அரசு இன்று அவசர ஆலோசனை
|சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி,
சீனாவில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று நமது நாட்டில் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.
ஆனால் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா தொற்று திடீர் எழுச்சி பெற்று வேகமாக பரவி வருகிறது.
இதையொட்டி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிற கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநிலங்களுக்கு கடிதம்
இதையொட்டி மாநிலங்களை மத்திய அரசு உஷார்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
இந்த கடிதத்தில் அவர் கூறி உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-
* புதிதாக தோன்றுகிற கொரோனா வைரஸ் திரிபுகளை கண்டறிய வேண்டும். இதற்காக கொரோனா நேர்மறை சோதனை செய்யப்படுகிறவர்களின் மாதிரிகளை சேகரித்து, மரபணு வரிசைப்படுத்தல் சோதனைக்கு உட்படுத்துவதை முடுக்கி விட வேண்டும். கொரோனா உறுதி செய்யப்படுவோரின் மாதிரிகளை தினமும் மரபணு வரிசைப்படுத்துதல் சோதனைக்காக, அவற்றுக்காக அமைக்கப்பட்டுள்ள 'இன்சாகாக்' ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* இந்தியாவில் 5 அடுக்கு உத்தியை பின்பற்றி வருவதால் நமது நாட்டில் கொரோனா வாராந்திர பாதிப்பு 1,200 என்ற அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
* உலகளவில் வாராந்திர பாதிப்பு 35 லட்சம் என்ற அளவுக்கு இருந்து வருகிறது. எனவே பொது சுகாதார சவால் நீடிக்கிறது.
* எனவே கொரோனா வைரஸ் திரிபுகளை கண்காணிக்க வேண்டியது மிகவும் முக்கியமாக அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.