நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் அனைத்துக்கட்சி கூட்டம்: 17-ந்தேதி நடக்கிறது
|நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் 17-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், வருகிற 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை சிறப்பு கூட்டத்தொடர் ஒன்றுக்கு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
5 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் குறைகூறி வருகின்றன.
ஒரே நாடு, ஒரே தேர்தல்
எனினும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா, பொது சிவில் சட்டம், ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் இந்த தொடரில் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் இந்த சிறப்பு கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடைபெறக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தலைவர்களுக்கு கடிதம்
இந்த நிலையில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் வருகிற 17-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
இது தொடர்பாக அனைத்துக்கட்சிகளின் நாடாளுமன்றக்குழு தலைவர்களுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்த தகவலை அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளார்.
சுமுகமாக நடத்த ஆலோசனை
மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சினைகளால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.
எனவே இந்த 5 நாட்கள் சிறப்பு தொடரை சுமுகமாக நடத்துவது குறித்து அனைத்துக்கட்சிகளுடனும் ஆலோசனை நடத்துவதற்காக மத்திய அரசு இந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிகிறது.