16 மாநிலங்களுக்கு ரூ.56,415 கோடி: மூலதன முதலீட்டுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.4,079 கோடி நிதி - மத்திய அரசு ஒப்புதல்
|மூலதன முதலீட்டுக்காக தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரத்து 79 கோடி உள்பட 16 மாநிலங்களுக்கு ரூ.56 ஆயிரத்து 415 கோடி நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடெல்லி,
மாநிலங்களின் மூலதனச் செலவினங்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், 'மூலதன முதலீட்டுக்காக "மாநிலங்களுக்கு சிறப்பு உதவி புரியும் திட்டம்" 2023-2024 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகளுக்கு 50 ஆண்டு வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. அதன்படி இந்த நிதியாண்டு ஒட்டுமொத்தமாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.
இந்த திட்டம் வரிகளில் மாநிலங்களுக்கான பங்கு, அரசு வாகனங்கள் மற்றும் கடன்களுக்கான வகை, நகர்ப்புற சீர்திருத்தங்கள், காவலர் வீட்டுவசதி, மேக் இன் இந்தியா, ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு திட்டம் மற்றும் குழந்தைகள், வளரிளம் பருவத்தினரின் நலன் ஆகிய 8 பகுதிகளை உள்ளடக்கியதாகும்.
ரூ.56,415 கோடி
இந்த நிதியாண்டு வழங்க திட்டமிடப்பட்ட நிதியில் தற்போது தமிழ்நாடு, கர்நாடகம், தெலுங்கானா, பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு ரூ.56 ஆயிரத்து 415 கோடி வழங்க மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினத்துறை ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழ்நாட்டுக்கு ரூ.4 ஆயிரத்து 79 கோடி கிடைக்கும்.
கடந்த ஆண்டு இந்த சிறப்பு உதவி திட்டத்தில் ரூ.95,147.19 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டு, ரூ.81,195.35 கோடி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள இந்த நிதி சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம், நீர் வழங்கல், மின்சாரம், சாலைகள், பாலங்கள் மற்றும் ரெயில்வே உள்ளிட்ட துறைகளில் மூலதன முதலீட்டு திட்டங்களுக்காக பயன்படுத்தப்படும்.