ஜல்லிக்கட்டை மத்திய அரசு ஆதரிக்கவில்லை - மந்திரி அனுராக் தாக்குர்
|மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என மந்திரி அனுராக் தாக்குர் கூறி உள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்.பி. ரவ்னீத் சிங், மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மாட்டுவண்டி பந்தயம் பிரபலம் என்று தெரிவித்து, நாட்டில் மாட்டுவண்டி பந்தயம் தடை செய்யப்பட்டுள்ளதா?, ஜல்லிக்கட்டு போன்ற காளைகளை உள்ளடக்கிய விளையாட்டுகளை நடத்த அரசு அனுமதித்து உள்ளதா? என்பன போன்ற கேள்விகளை கேட்டு இருந்தார்.
இதற்கு மத்திய தகவல், ஒலிபரப்பு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை மந்திரி அனுராக் தாக்குர் இன்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் அவர் கூறி இருப்பதாவது:-
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், கிராமப்புற மற்றும் உள்ளூர் விளையாட்டுகள் அல்லது பழங்குடி விளையாட்டுகளை ஊக்குவித்தல் என்கிற துணைக்கூறுகளின் அடிப்படையில் 'கேலோ இந்தியா' திட்டத்தை செயல்படுத்துகிறது.
மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் இந்த திட்டத்திலோ அல்லது அமைச்சகத்தின் வேறு எந்த திட்டங்களிலோ ஆதரிக்கப்படவில்லை. இதுபோன்ற விளையாட்டுகளை ஊக்குவிக்கும் திட்டம் எதுவும் தற்போது இல்லை.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.