< Back
தேசிய செய்திகள்
காந்தி, நேரு புகழை கெடுக்க மத்திய அரசு முயற்சி:  சோனியா காந்தி அதிரடி குற்றச்சாட்டு
தேசிய செய்திகள்

காந்தி, நேரு புகழை கெடுக்க மத்திய அரசு முயற்சி: சோனியா காந்தி அதிரடி குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
15 Aug 2022 6:37 AM GMT

காந்தி மற்றும் நேரு புகழுக்கு அவதூறு ஏற்படுத்த மத்திய அரசு முயற்சி செய்கிறது என காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.



புதுடெல்லி,



இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி நாட்டு மக்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

இதுபற்றி அவர் வெளியிட்ட அறிவிப்பில், அறிவியல், கல்வி, சுகாதாரம் மற்றும் தகவல் துறைகளில் கடந்த 75 ஆண்டுகளில் அதிக திறமை வாய்ந்த இந்தியர்கள் நாட்டை வளர்ச்சிக்கான பாதையில் அழைத்து சென்றுள்ளனர்.

தொலைநோக்கு பார்வை கொண்ட இந்திய தலைவர்கள், திறந்த நிலையிலான, முறையான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடைமுறைக்கு அடித்தளம் இட்டுள்ளனர். ஒரு வலிமையான ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசன அமைப்புகளுக்கான பிரிவுகளையும் உருவாக்கி தந்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

தனது பன்முக கலாசாரம் மற்றும் மொழிகள் ஆகியவற்றால் ஒரு போற்றத்தக்க நாடாக இந்தியா அடையாளப்படுத்தப்பட்டு உள்ளது என்றும் அவர் சுட்டி காட்டியுள்ளார்.

இதேபோன்று, மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, ஆசாத் மற்றும் பட்டேல் போன்ற தலைவர்களின் புகழுக்கு அவதூறு ஏற்படும் வகையில், வரலாற்று உண்மைகளை பொய்யாக்க இந்த தற்பெருமை பேசும் அரசு முயற்சிக்கிறது.

அதன் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய தேசிய காங்கிரஸ் எதிர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார். சுதந்திர போராட்டத்தின்போது, இந்திய படையின் தியாகங்களை சிறுமைப்படுத்தும் முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடுகிறது என அவர் குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்