< Back
தேசிய செய்திகள்
மாநிலங்களவை நியமன உறுப்பினராக மத்திய அரசு அறிவிப்பு: இளையராஜாவுக்கு எம்.பி. பதவி - பி.டி.உஷாவும் நியமனம்
சென்னை
தேசிய செய்திகள்

மாநிலங்களவை நியமன உறுப்பினராக மத்திய அரசு அறிவிப்பு: இளையராஜாவுக்கு எம்.பி. பதவி - பி.டி.உஷாவும் நியமனம்

தினத்தந்தி
|
7 July 2022 5:21 AM IST

மாநிலங்களவை நியமன எம்.பி.யாக இசையமைப்பாளர் இளையராஜாவை நியமித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தடகள வீராங்கனை பி.டி.உஷாவும் எம்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 12 உறுப்பினர்களை நியமன எம்.பி.க்களாக ஜனாதிபதி நேரடியாக நியமிக்கிறார்.

கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, சட்டம், சமூக சேவை உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன எம்.பி. பதவியை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

தற்போதைய நிலையில் சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், ராகேஷ் சின்கா உள்பட 5 பேர் நியமன எம்.பி.க்களாக உள்ளனர்.

மேலும் காலியாக உள்ள இடங்களுக்கு எம்.பி.க்களை நியமனம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வந்தது.

இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை எம்.பி.யாக மத்திய அரசு நியமித்து உள்ளது.

இசைத்துறையில் அவர் செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரித்து கவுரவிக்கும் பொருட்டு இந்த பதவி வழங்கப்பட்டு உள்ளது.

இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதை பிரதமர் மோடி நேற்று தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து இருந்தார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'படைப்பு மேதை இளையராஜா ஜி பல்வேறு தலைமுறைகளாக மக்களை கவர்ந்தவர். அவரது பாடல்கள் பல உணர்வுகளை அழகாக பிரதிபலிக்கின்றன. எளிய பின்னணியில் இருந்து உயர்ந்து சாதித்திருக்கும் அவரது வாழ்க்கை பயணம் அனைவருக்கும் ஊக்கமளிக்கும் வகையில் உள்ளது. அவர் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது' என்று புகழாரம் சூட்டி இருந்தார்.

மொழி, இனம் போன்ற பாகுபாடுகளை கடந்து சினிமா இசை ரசிகர்களை பல பத்தாண்டுகளாக கட்டிப்போட்டு உள்ள இளையராஜா, பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

இசையுலகில் மேற்கொண்ட மகத்தான சாதனைகளுக்காக பத்மவிபூஷண், பத்மபூஷண் உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். மேலும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் பலமுறை பெற்றுள்ளார்.

பிரதமர் மோடி குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான புத்தகம் ஒன்றில், அவரை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா முன்னுரை எழுதியிருந்தார்.

இது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், அவருக்கு மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்படலாம் என்றும் யூகங்கள் கிளம்பியிருந்தது நினைவுகூரத்தக்கது.

மாநிலங்களவை நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டிருக்கும் இளையராஜாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான திரையுலகினர், அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

இதைப்போல தடகள வீராங்கனை பி.டி.உஷாவுக்கும் நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டு இருக்கிறது. கேரளாவை சேர்ந்த பி.டி.உஷா, சர்வதேச தடகள போட்டிகளில் ஏராளமான பதக்கங்களை குவித்து இந்தியாவுக்கு பெருமை தேடித்தந்துள்ளார்.

அவரது வெற்றிகளை கவுரவிக்கும் வகையில் இந்த பதவி அளித்து மத்திய அரசு பெருமைப்படுத்தி இருக்கிறது. பி.டி.உஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'குறிப்பிடத்தக்க திறன் பெற்ற பி.டி.உஷா ஜி ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம். விளையாட்டில் அவரது சாதனைகள் பரவலாக அறியப்படுகிறது. அத்துடன் வளர்ந்து வளரும் விளையாட்டு வீரர்களுக்கு வழிகாட்டியாக கடந்த பல ஆண்டுகளாக அவர் ஆற்றிய பணி பாராட்டத்தக்கது. அவர் மாநிலங்களவைக்கு நியமனம் செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள்' என குறிப்பிட்டு இருந்தார்.

இவர்களை தவிர கர்நாடகாவை சேர்ந்த சமூக சேவகரும், தர்மஸ்தலா கோவில் நிர்வாகியுமான வீரேந்திர ஹெக்டே, பாகுபலி, ஆர்.ஆர்.ஆர். உள்ளிட்ட பிரமாண்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை எழுதிய ஆந்திராவை சேர்ந்த பிரபல கதாசிரியரும், இயக்குனர் ராஜமவுலியின் தந்தையுமான வீரேந்திர பிரசாத் ஆகியோரும் மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்கள் ஆகின்றனர்.

இவர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து, அவர்கள் சார்ந்த துறைகளில் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகளை பாராட்டி உள்ளார்.

மாநிலங்களவையின் புதிய நியமன எம்.பி.க்களாக நியமிக்கப்பட்டுள்ள இந்த 4 பேரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சி தென்னிந்திய மாநிலங்களில் பலவீனமாக இருக்கும் நிலையில், கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சியை இங்கிருந்து தொடங்குவது என சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்த தேசிய செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.

இந்த சூழலில் தென்னக மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்