< Back
தேசிய செய்திகள்
மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மத்திய அரசு தடுக்கவில்லை - திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேச்சு
தேசிய செய்திகள்

மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மத்திய அரசு தடுக்கவில்லை - திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேச்சு

தினத்தந்தி
|
8 Aug 2023 2:42 PM IST

தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது என்று மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு கூறினார்.

புதுடெல்லி,

மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மக்களவையில் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியதாவது:-

நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடியை வர வைக்க வேறு வழி இல்லாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. தீமைகளை அழிக்க வேண்டும் என்பதற்காகவே நம்பிக்கையில்லா தீர்மானம்.

தமிழ்நாட்டை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடத்துகிறது. பிரதமர் நரேந்திரமோடி எங்கு சென்றாலும் திருக்குறள், திருவள்ளுவர் பற்றி பேசுகிறார் ஆனால் தமிழ்நாட்டிற்கு பிரதமர் எதுவும் செய்யவில்லை. பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள், 5 ஆண்டுகளாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. ரூ.15 லட்சம் கோடிக்கு பட்ஜெட் போடும் மத்திய அரசு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ரூ.2,000 கோடி கூட ஒதுக்க முடியவில்லை.

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வேலையின்மை அதிகரித்துள்ளது. அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெரும்பான்மை மக்களை வைத்து சிறுபான்மையின மக்களின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் வழங்குவோம், வேலை வாய்ப்பு, உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் மோடி அரசு நிறைவேற்றவில்லை.

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதில் பாஜக அரசு தோல்வி அடைந்துவிட்டது. சட்டமன்றம், நாடாளுமன்றத்தில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு தவறிவிட்டது. இலங்கை அரசியல் சட்டத்தில் 13-வது சட்டத் திருத்தத்தை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

முன்பு குஜராத்தில் நடந்தது போல இப்போது மணிப்பூரில் நடக்கிறது. மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை மத்திய அரசு தடுக்கவில்லை. உலக நாடுகள் பாராட்டிய, சேது சமுத்திரத்திட்டம் சங் பரிவார் அமைப்பால் கிடப்பில் போடப்பட்டுள்ளது. காங்கிரஸ்-திமுக கொண்டு வந்த திட்டம் என்பதால் கிடப்பில் போட்டுள்ளீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்