காவிரி பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை
|காவிரி பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெங்களூரு
விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையம், ஒழுங்காற்று குழு ஆகிய 2 குழுக்களை அமைத்தது. காவிரி பிரச்சினையை நல்லிணக்கத்துடன் தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடக மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில் பா.ஜனதாவுக்கு குறைந்தபட்ச அக்கறை கூட இல்லை. இந்த பிரச்சினையில் பா.ஜனதாவின் 25 எம்.பி.க்களின் பங்கு என்ன?.
மண்டியாவுக்கு வந்து ஊடகங்கள் முன்பு தோன்றி போராட்டம் நடத்தினால் போதுமா?. எதிா்க்கட்சிகளின் தலைவர்கள் அரசியல் நோக்கத்திற்காக பிரதமரை சந்திக்கிறார்கள்.
ஆனால் காவிரி பிரச்சினை குறித்து பேச பிரதமரை சந்திக்காதது ஏன்?. காவிரி பிரச்சினையில் பிரதமர் மோடி தலையிட்டு பிரச்சினையை சுமுகமாக தீர்க்க வேண்டும். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட முடியாது என்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் சொல்வது சரியல்ல.
அரசியல் வேறு, மாநில நலன் வேறு. இதை பா.ஜனதாவினா் புரிந்து கொள்ள வேண்டும். காவிரி ஆணைய உத்தரவுகள் அனைத்து ஆட்சி காலத்திலும் பின்பற்றப்பட்டுள்ளது.
எங்களை மட்டும் எதிர்க்கட்சியினர் குறை சொல்வது சரியல்ல. வருகிற 12-ந் தேதி காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடக்கிறது. இதில் தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க இயலாது என்று கூறுவோம்.
இவ்வாறு செலுவராயசாமி கூறினார்.