நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் - பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வலியுறுத்தல்
|நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.
பாட்னா,
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், 2021-ம் ஆண்டு நடத்த வேண்டிய கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்த கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் நடத்தப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, இதை தெரிவித்தார். ஆனால் இந்த கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், பீகார் முதல்-மந்திரியுமான நிதிஷ்குமார் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021-ம் ஆண்டிலேயே முடிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த நடைமுறை முதல் முறையாக தாமதமாகி வருகிறது. 2024-ம் ஆண்டு தேர்தல் முடியும் வரை எதற்காக காத்திருக்க வேண்டும்? ஏன் இப்போதே தொடங்கக்கூடாது? 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக தொடங்க வேண்டும். இனியும் தாமதிக்கத் தேவையில்லை.
மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என நாங்கள் விரும்பினோம். ஆனால் மத்திய அரசு ஒப்புக்கொள்ளவில்லை. எனவே பீகாரில் நாங்களே சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினோம்.
சாதிவாரி கணக்கெடுப்பில் தலித் மற்றும் பழங்குடியினர் மட்டுமின்றி பிற சாதிகளும் கணக்கிடப்படுகின்றன. இது அனைவருக்கும் பயன் அளிக்கும். குறிப்பாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் உள்பட அனைத்து தரப்பினரின் வளர்ச்சிக்காக உழைக்க இது உதவும். எந்தெந்த பகுதிகளில் வளர்ச்சி தேவை என்பதை அறிய இது உதவும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்துவது எப்படி? மகளிர் இடஒதுக்கீட்டுக்கான பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைவில் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.
மகளிர் இடஒதுக்கீட்டை நான் எப்போதும் ஆதரித்து வருகிறேன். பெண்களுக்கு உறுதியான பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும். எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் பெண்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை எங்கள் அரசு உறுதி செய்துள்ளது. நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு பெண்களின் பிரதிநிதித்துவம் பீகாரில் உள்ளது.
தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு போதுமான பிரதிநிதித்துவம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு நிதிஷ்குமார் தெரிவித்தார்.