சக்கரேபைலுவில் உலக யானைகள் தின நாள் கொண்டாட்டம்
|சிவமொக்கா மாவட்டம் சக்கரேபைலுவில் உள்ள யானைகள் முகாமில் நேற்று உலக யானைகள் தின நாள் கொண்டாடப்பட்டது. அப்போது யானைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது
சிவமொக்கா-
சிவமொக்கா மாவட்டம் சக்கரேபைலுவில் உள்ள யானைகள் முகாமில் நேற்று உலக யானைகள் தின நாள் கொண்டாடப்பட்டது. அப்போது யானைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
யானைகள் முகாம்
சிவமொக்கா மாவட்டம் சக்கரேபைலுவில் யானைகள் முகாம் அமைந்துள்ளது. வனப்பகுதியில் இருந்து பிடிக்கப்பட்ட காட்டுயானைகள் இந்த முகாமில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் அவற்றுக்கு 'கும்கி' பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த யானைகள் முகாமில் நேற்று உலக யானைகள் தின விழா கடைப்பிடிக்கப்பட்டது.
இதையொட்டி முகாமில் உள்ள அனைத்து யானைகளுக்கும் அலங்காரங்கள் செய்யப்பட்டது. அதாவது காலையிலேயே அனைத்து யானைகளும் துங்கா ஆற்றில் குளிக்க வைக்கப்பட்டன. அப்போது சில யானைகள் ஆர்வ மிகுதியில் ஆற்றில் குதூகலமாக குளித்தன. பின்னர் அவற்றுக்கு ஜொலிக்கும் வகையிலான பித்தளை அணிகலன்களை அணிவித்தனர்.
ஆரவாரம்
அதையடுத்து அவற்றுக்கு அரிசி, வெல்லம், கரும்பு ஆகியவற்றை உணவாக கொடுத்தனர். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் முன்னிலையில் உலக யானைகள் தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது யானைகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. யானைகளின் சுட்டித்தனத்தைப் பார்த்து பலரும் ஆரவாரம் செய்தனர். மேலும் பொதுமக்கள் யானைகள் விளையாடியதையும், அவற்றின் சுட்டித்தனத்தையும் தங்களது செல்போன்களில் புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து மகிழ்ந்தனர்.
பலர் யானைகள் முன்பு நின்று செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சக்கரேபைலு வனப் பாதுகாவலர்கள் செய்திருந்தனர்.