தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சார்பில் நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் இயக்கம்
|இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில் 75 லட்சம் மரங்களை வளர்ப்பதை நெடுஞ்சாலைகள் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் அம்ரித் மோஹோத்சவைக் குறிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள், 75 லட்சம் மரங்களை வளர்ப்பதை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் இலக்காகக் கொண்டுள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தினம் 'அம்ரித் மகோத்சவ்' என்ற பெயரில் கொண்டாடப்பட உள்ளது. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில், 'ஆசாதி கா அம்ரித் மஹோத்சவின்' ஒரு பகுதியாக, ஜூலை 17ஆம் தேதி தேசிய அளவிலான மரம் நடும் இயக்கத்தை 'தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்' ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடுவதே இதன் நோக்கம். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகளில் நடவு செய்வதற்கான 100 தளங்களை நெடுஞ்சாலைத் துறையின் பிராந்திய அலுவலகங்கள் அடையாளம் கண்டுள்ளன.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி, அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் மரம் நடும் இயக்கத்தில் பங்கேற்கின்றனர்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களும் மரக்கன்றுகளை நட்டு பராமரிப்பதில் ஈடுபடும்.
சுற்றுச்சூழலின் நிலைத்தன்மை பற்றிய செய்தியை பரப்புவதற்காக பொதுமக்கள் பிரதிநிதிகள், உள்ளூர் மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்கேற்பை இந்த பிரச்சாரம் காணும்.
சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலான தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்துவதற்காக, அவ்வப்போது மரம் நடும் பிரச்சாரங்களை நெடுஞ்சாலைத்துறை நடத்துகிறது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வன மற்றும் தோட்டக்கலை நிபுணர்கள், நன்கொடையாளர்கள், மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நடவு முகமைகள், பெண்கள் சுய உதவிக் குழுக்களை உள்ளடக்கி தேசிய நெடுஞ்சாலைகளில் பெருந்தோட்டங்களை பெருக்குவதற்கான ஒரு பார்வையைக் கொண்டுள்ளனர்.