< Back
தேசிய செய்திகள்
இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.ஐ.யின் முக்கிய கடமை - பிரதமர் மோடி தகவல்
தேசிய செய்திகள்

இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.ஐ.யின் முக்கிய கடமை - பிரதமர் மோடி தகவல்

தினத்தந்தி
|
4 April 2023 5:50 AM IST

இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.ஐ.யின் முக்கிய கடமை என பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

நாட்டின் உயரிய விசாரணை அமைப்புகளில், மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) முக்கியமானது. இது கடந்த 1963-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி தொடங்கப்பட்டது.

இதன் வைர விழா கொண்டாட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இந்த கொண்டாட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசும்போது அவர் கூறியதாவது:-

ஊழல் என்பது வெறும் ஒரு சிறிய குற்றம் அல்ல. இது ஏழைகளின் உரிமைகளை பறிப்பதுடன் மேலும் பல குற்றவாளிகள் பிறக்கவும் வழிவகுக்கிறது.

ஊழலை எதிர்த்து போராடுவதில் எங்கள் அரசின் அரசியல் ஆர்வத்தில் குறைவில்லை. எந்தவொரு ஊழல்வாதியையும் தப்ப விடக்கூடாது என நாடும், அதன் குடிமக்களும் விரும்புகின்றனர்.

எனவே கருப்பு பணம் மற்றும் பினாமி சொத்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு தொடங்கியது. ஊழல்வாதிகளை மட்டுமின்றி அதற்கான வழிகளையும் எதிர்த்து போராடுகிறோம்.

ஜனநாயகம் மற்றும் நீதித்துறைக்கு மிகப்பெரிய தடையாக ஊழல் இருக்கிறது. எனவே இந்தியாவை ஊழலில் இருந்து விடுவிப்பதே சி.பி.ஐ.யின் முக்கிய கடமையாக உள்ளது.

சம வாய்ப்பு மறுப்பு

தொழில் வல்லுனர்கள் மற்றும் திறமையான நிறுவனங்கள் இல்லாமல், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவது சாத்தியமில்லை. எனவே சி.பி.ஐ.க்கு மிகப்பெரிய பொறுப்பு உள்ளது.

இன்றும் ஒரு வழக்கு தீர்க்கப்படாமல் இருந்தால், அதை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.

தனது பணிகள் மற்றும் தொழில்நுட்பங்களால் மக்களுக்கு நம்பிக்கையை சி.பி.ஐ. ஏற்படுத்தி இருக்கிறது.

ஊழல் இருக்கும் இடத்தில் இளைஞர்களுக்கு சமமான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. அத்துடன் குறிப்பிட்ட ஒரு அமைப்பு ஊக்கமடைகிறது.

குடும்ப ஆட்சி

தகுதியின் மிகப்பெரிய எதிரி ஊழல் ஆகும். இது வாரிசு அரசியல் மற்றும் குடும்ப ஆட்சியை ஊக்கப்படுத்துகிறது. இவை இரண்டும் அதிகரிக்கும்போது நாட்டின் வலிமை பாதிக்கப்படுகிறது. நாடு பலவீனமடையும்போது வளர்ச்சியையும் பாதிக்கிறது.

ஊழல்வாதிகள் பல்லாண்டுகளாக நாட்டின் செல்வங்களை சூறையாடுவதற்கான வழிகளை உருவாக்கியுள்ளனர். இது அரசின் செல்வங்களை கொள்ளையடிப்பதன் மூலம் உருவாக்கப்பட்டது.

இன்று, ஆதார் அட்டை மற்றும் மொபைல் போன்களை இணைக்கும், 'ஜன்தன்' வங்கி கணக்குகள் மூலம், பயனாளிகள் தங்கள் முழு உரிமை பெறுகின்றனர் என்று பிரதமர் மோடி கூறினார்.

இந்த விழாவில் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், சி.பி.ஐ. இயக்குனர் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பிரதமர் மோடிக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்